என் மலர்tooltip icon

    விளையாட்டு

    2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பம்
    X

    2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பம்

    • காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிற்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது.
    • இக்கடிதத்தை இந்திய காமன்வெல்த் விளையாட்டு சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா சமர்ப்பித்துள்ளார்.

    புதுடெல்லி:

    24-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2030-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இப்போட்டியை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்தது.

    இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த நிலையில் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிற்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது.

    இக்கடிதத்தை இந்திய காமன்வெல்த் விளையாட்டு சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா சமர்ப்பித்துள்ளார். இந்த போட்டியை குஜராத்தின் அகமதாபாத்தில் நடத்த முன்மொழியப்பட்டுள்ளது.

    போட்டியை நடத்துவதற்கான ஏலத்துக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 31-ந்தேதி ஆகும். அதற்கு முன்பாக பி.டி. உஷாவிடமிருந்து கடிதம் பெறப்பட்டதாக காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்புத் தலைவர் கிறிஸ் ஜென்கின்ஸ்,தலைமை நிர்வாக அதிகாரி கேட்டி சாட்லீர் ஆகியோர் குஜராத்திற்கு வந்திருந்தனர். அப்போது அவர்களிடம் முக்கிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் அகமதாபாத்தின் பங்களிப்பை பி.டி.உஷா விளக்கி இருந்தார்.

    2026-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடக்க இருந்தது. ஆனால் அதிலிருந்து ஆஸ்திரேலியா விலகியது. இதையடுத்து இப்போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது. இதில் ஹாக்கி, பேட்மிண்டன், மல்யுத்தம், துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட 10 போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்தும் முயற்சி தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தி காட்ட இந்தியா விருப்பமாக உள்ளது.

    Next Story
    ×