என் மலர்
பாரிஸ் ஒலிம்பிக் 2024
400 மீட்டர் தடை ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை உலக சாதனை
- நோவா லைல்சால் 200 மீட்டர் ஓட்டத்தில் வெற்றிபெற முடியவில்லை.
- ஜமைக்காவை சேர்ந்த ரஷீத் பிராட்டெல் (13.09) வெண்கலமும் கைப்பற்றினார்கள்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நள்ளிரவு 12.55 மணிக்கு பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமெரிக்க வீராங்கனை லெவரோன் சிட்னி மெக்லாக்லின் புதிய உலக சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 50.37 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் அவர் 50.65 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. தனது சாதனையை முறியடித்து மெக்லாக்லின் புதிய சாதனை நிகழ்த்தினார்.
மற்றொரு அமெரிக்க வீராங்கனை அனா காக்ரெல் 51.87 வினாடியில் கடந்து வெள்ளியும், நெதர்லாந்தை சேர்ந்த பெமே போல் 52.15 வினாடியில் கடந்து வெண்கலமும் கைப்பற்றினார்கள்.
உலகின் அதிவேக வீரரான அமெரிக்காவை சேர்ந்த நோவா லைல்சால் 200 மீட்டர் ஓட்டத்தில் வெற்றிபெற முடியவில்லை. 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அவர் 200 மீட்டர் ஓட்டத்தில் 19.70 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றார்.
போஸ்ட்வானாவை சேர்ந்த டெபேகோ 19.46 வினாடியில் கடந்து தங்கப் பதக்கமும், மற்றொரு அமெரிக்க வீரர் கென்னத் பெட்னரிக் 19.62 வினாடியில் கடந்து வெள்ளியும் பெற்றனர்.
ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கிராண்ட் ஹேர்லேவே 12.99 வினாடியில் கடந்த தங்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீரர் டேனியல் ராய்ட்ஸ் (13.09 வினாடி) வெள்ளியும், ஜமைக்காவை சேர்ந்த ரஷீத் பிராட்டெல் (13.09) வெண்கலமும் கைப்பற்றினார்கள்.
பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் அமெரிக்க வீராங்கனை தாரா டேவில் 7.10 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். ஜெர்மனி, அமெரிக்காவுக்கு முறையே வெள்ளி, வெண்கலம் கிடைத்தன.