என் மலர்
பாரிஸ் ஒலிம்பிக் 2024
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஆல்பிரட் தங்கம் வென்றார்
- 1996-ம் ஆண்டில் இருந்துதான் செயின்ட் லுசியா ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது.
- 1988 சியோல் ஒலிம்பிக்குக்கு பிறகு தற்போது தான் ஜமைக்கா முதல் 3 இடங்களை பிடிக்க தவறியது.
பாரீஸ்:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
உலகின் அதிகவேக வீராங்கனை யார்? என்பதை நிர்ணயம் செய்யும் மகளிர் 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.50 மணிக்கு நடைபெற்றது. தகுதி சுற்று மற்றும் அரைஇறுதி மூலம் 'டாப் 8' வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.
முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான ஷெல்வி ஆன்பிரேசர் பிரைஸ் (ஓமைக்கா) அரை இறுதியில் திடீரென விலகினார்.
இதில் யாருமே எதிர்பார்க்காதவாறு அமெரிக்கா, ஜமைக்காவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் செயின்ட் லூசியா வீராங்கனை ஜூலியன் ஆல்பிரட் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 10.72 வினாடியில் கடந்து முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார். தீவு நாடான செயின்ட் லூசியாவுக்கு ஒலிம்பிக்கில் முதல் முறையாக பதக்கம் கிடைத்துள்ளது. அந்த பெருமை ஜூலியன் ஆல்பிரட்டை சாரும்.
1996-ம் ஆண்டில் இருந்துதான் செயின்ட் லுசியா ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஷகாரி ரிச்சர்ட்சன் 10.87 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கமும், மெலிசா ஜெபர்சன் 10.92 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
1988 சியோல் ஒலிம்பிக்குக்கு பிறகு தற்போது தான் ஜமைக்கா முதல் 3 இடங்களை பிடிக்க தவறியது. அந்நாட்டை சேர்ந்த டியா கிளைடனால் 7-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
4x400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் நெதர்லாந்து தங்கம் வென்றது. அந்த அணி வீரர், வீராங்கனைகள் பந்தய தூரத்தை 3 நிமிடம் 7.43 வினாடியில் கடந்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். தகுதி சுற்றில் புதிய உலக சாதனை படைத்த அெமரிக்காவில் 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அந்த அணி 3 நிமிடம் 07.74 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றது. இங்கிலாந்து அணி 3 நிமிடம் 08.01 வினாடியில் கடந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.
பெண்களுக்காகன டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் டொமினிக்சன் வீராங்கனை தியா லபோனட் 15.02 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார்.
ஜமைக்காவை சேர்ந்த நிக்கெட்ஸ் 14.87 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், அமெரிக்க வீராங்கனை ஜாஸ்மின் மூர் 14.67 மீட்டர் தூரம் தாண்டி வெண்கல பதக்கமும் பெற்றனர்.
ஆண்களுக்கான குண்டு எறிதலில் அமெரிக்க வீரர் ரியான் கிரவுசர் 22.90 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீரர் ஜோ கோவாஸ் 22.15 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், ஜமைக்காவை சேர்ந்த கேம்பெல் வெண்கல பதக்கமும் பெற்றனர்.
ஆண்களுக்கான டெகத் லான் போட்டியில் நார்வே வீரர் மார்க்ஸ் ரூத் 8796 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். ஜெர்மனியை சேர்ந்த லியோ நியூ கெபூர் வெள்ளிப் பதக்கமும் (8748 புள்ளிகள்), கிரினிடா வீரர் லின்டன் விக்டர் வெண்கல பதக்கத்தையும் (8711 புள்ளிகள்) கைப்பற்றினார்.
டெகத்லான் என்பது 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்டம், 110 மீட்டர் தாண்டுதல் ஓட்டம், வட்டு எறிதல், போல் வால்ட், ஈட்டி எறிந்து, 1,500 மீட்டர் ஓட்டம் ஆகிய 10 விளையாட்டுகளை உள்ளடக்கியதாகும்.