search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு
    X

    பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு

    • நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறோம்.
    • போட்டியில் தொடக்கத்தில் எங்களுக்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அழுத்தம் கொடுத்தனர்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நாக்பூரில் நேற்று இரு அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 52 ரன்னும், பெத்தேல் 51 ரன்னும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா, ராணா தலா 3 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் விளையாடிய இந்தியா 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்து வென்றது. சுப்மன் கில் 87 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 59 ரன்னும், அக்சர் பட்டேல் 52 ரன்னும் எடுத்தனர்.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறோம். ஒரு அணியாக விரைவாக மீண்டும் ஒருங்கிணைந்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் அறிய விரும்பினோம். எனவே இப்போட்டியில் வென்றது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது.

    இந்த போட்டியில் தொடக்கத்தில் எங்களுக்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அழுத்தம் கொடுத்தனர். ஆனால் நாங்கள் ஆட்டத்துக்குள் திரும்பி வந்த விதம் சிறப்பாக இருந்தது.

    பந்துவீச்சாளர்கள் அனைவரும் உறுதுணையாக இருந்தனர். முக்கியமான நேரத்தில் நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினோம். மைதானத்தில் வீரர்களிடம் உத்வேகமும் அற்புதமாக இருந்தது. அக்சர் பட்டேல் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்து வருகிறார். அதை இன்று பார்க்க முடிந்தது. எங்களுக்கு ஒரு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டபோது சுப்மன் கில்-அக்சர் பட்டேல் ஜோடி நன்றாக பேட்டிங் செய்தது.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பாக குறிப்பிட்ட எந்த இலக்கும் இல்லை. ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக நாங்கள் தொடர்ந்து சரியான விஷயங்களைச் செய்வதை உறுதிசெய்ய விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடக்கிறது.

    Next Story
    ×