search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளச்சாராயத்தால் நிற்கதி - முதலமைச்சரிடம் சிறுமி கண்ணீர் மல்க வேண்டுகோள்
    X

    கள்ளச்சாராயத்தால் நிற்கதி - முதலமைச்சரிடம் சிறுமி கண்ணீர் மல்க வேண்டுகோள்

    • 3 பேரின் கல்வி செலவை அ.தி.மு.க. ஏற்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
    • தாயையும், தந்தையையும் கள்ளச்சாராயத்துக்கு பறி கொடுப்போம் என்று கோகிலா கனவிலும் நினைத்து பார்த்துக் இருக்க மாட்டாள்.

    கோகிலாவுக்கு ஏற்பட்டு இருக்கும் சோகம் உலகில் யாருக்கும் ஏற்பட கூடாது. அந்த சிறுமிக்கு தற்போது 16 வயதே ஆகிறது.

    உலகம் எப்படிப்பட்டது? உறவினர்கள் எத்தகையவர்கள்? நட்பு வட்டாரங்களின் நோக்கம் என்ன? என்பது போன்ற எதுவுமே தெரியாத பருவம். சுருக்கமாக செல்ல வேண்டுமானால் வஞ்சகம் நிறைந்த இந்த உலக வாழ்க்கையின் எந்த ஒரு பாகத்தையும் அனுபவித்து அறியாத பருவத்தில் இருப்பவள்.

    மற்ற சிறுவர்-சிறுமிகள் ஓடியாடி துள்ளி விளையாடி துளியும் கவலை இல்லாமல் வாழும் நிலையில் மனதில் அந்த சிறுமி பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஏற்பட்ட இந்த சோகத்துக்கு காரணம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்.

    அந்த சம்பவத்தில் பலியான 64 பேரில் கோகிலாவின் தாயும், தந்தையும் அடங்குவார்கள். ஒரே நாளில் தனது தாயையும், தந்தையையும் கள்ளச்சாராயத்துக்கு பறி கொடுப்போம் என்று கோகிலா கனவிலும் நினைத்து பார்த்துக் இருக்க மாட்டாள்.

    அவளது தந்தை சுரேஷ். பெயிண்டர். தாய் வடிவுக்கரசி. பண்ணையில் வேலை பார்தது வந்த கூலித்தொழிலாளி. அவர்கள் இருவரும் சேர்ந்து குடும்பத்தை நடத்தி வந்தனர். 20க்கு 20 அடி வாடகை வீட்டில் வசித்த வந்த அவர்கள் தினசரி உழைத்தால்தான் சாப்பாடு என்ற நிலையில் காலத்தை தள்ளியவர்கள்.


    அவர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரம் மகள் கோகிலா. 2 மகன்கள் ஹரிஸ், ராகவன். கோகிலாவுக்கு 16 வயது. ஹரிசுக்கு 15 வயது, ராகவனுக்கு 14 வயது.

    இந்த இளம் வயதில் இந்த 3 பிஞ்சுகளையும் தவிக்க விட்டுவிட்டு சுரேசும், வடிவுக்கரசியும் கள்ளச்சாராயத்துக்கு பலியாகி உள்ளனர். இவர்களில் சுரேஷ் தினமும் உடல்வலி நீங்குவதற்காக கள்ளச்சாராயம் குடிப்பதை பழக்கத்தில் வைத்திருந்தார்.

    சம்பவத்துன்று கள்ளச்சாராயத்தை அவர் ரகசியமாக ஒளித்து வைப்பதற்காக வேறு ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்திருந்தார். வடிவுக்கரசி அதை ஏற்கனவே தான் வாங்கி வைத்திருந்த ஓமம் தண்ணீர் என்று தவறுதலாக நினைத்து குடித்து விட்டார். விளைவு கணவன்-மனைவி இரண்டு பேருமே உயிரை பறிக்கொடுத்து விட்டனர்.

    இந்த பரிதாபத்தால் தற்போது குடும்ப பொறுப்பு 16 வயது கோகிலா மீது விழுந்துள்ளது. 15 வயது ஹரிசையும், 14 வயது ராகவனையும் படிக்க வைத்து ஆளாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பை கோகிலா ஏற்று இருப்பதாக கூறி உள்ளாள். ஆனால் துரதிஷ்டவசமாக சிலர் அவளுக்கு இடையூறு ஏற்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.

    தந்தை சுரேசுக்கு கடன் கொடுத்து இருப்பதாகவும் எனவே அரசு தரும் ரூ.10 லட்சம் நிதி உதவியை தங்கள் கடனை கழிக்க தர வேண்டும் என்றும் மிரட்ட தொடங்கி இருக்கிறார்களாம்.

    இந்த 3 பேரின் கல்வி செலவை அ.தி.மு.க. ஏற்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த பணத்தையும் சிலர் கேட்டு மிரட்டுகிறார்களாம். இதனால் கோகிலா மிரண்டு போய் இருக்கிறாள்.

    திக்கு தெரியாமல் தவிக்கும் அந்த சிறுமி ஒரே ஒரு உதவிதான் கேட்கிறாள். சொந்தமாக குடியிருக்க வீடு இல்லை. முதலமைச்சர் தனக்கு ஒரு வீடு தந்தால் பிழைத்துக் கொள்வோம் என்று அவள் கண்ணீர் மல்க சொன்னது நெஞ்சை கடப்பாரையால் குத்துவது போல் இருக்கிறது.

    சிறு வயதிலேயே இப்படி ஒரு பாரத்தை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கோகிலா நிச்சயம் போராடி ஜெயிப்பேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறாள். அவளுக்கு உற்சாகம் கொடுத்தாலே போதும் 3 குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி விட முடியும்.

    Next Story
    ×