search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விக்கிரவாண்டி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 28 பேர் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு மாற்றம்
    X

    விக்கிரவாண்டி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 28 பேர் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு மாற்றம்

    • ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 23 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

    விக்கிரவாண்டி:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கினார். அங்கு 2021-ம் ஆண்டு மன நலம் பாதிக்கப்பட்ட திருப்பூரை சேர்ந்த ஜபருல்லா மாயமானது குறித்து அவரது உறவினர் கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் கண்டு பிடிக்காத நிலையில் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

    கோர்ட்டு உத்தரவின்படி கடந்த 10-ந் தேதி செஞ்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 145 பேர் தங்க வைக்கப்பட்டு இருந்ததும் ஆசிரமம் அனுமதியின்றி செயல்பட்டதும் தெரிய வந்தது.

    ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிலருக்கு பாலியல் தொந்தரவு, சித்ரவதை மற்றும் பலர் காணாமல் போனதாக புகார்கள் அளித்தனர். இதுகுறித்து தனித்தனி புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து ஆசிரம நிர்வாக ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஆசிரமத்திலிருந்த ஜபருல்லா உள்பட 53 பேரை பெங்களூருவில் ஜூபின் பேபி நண்பர் ஆட்டோ ராஜா நடத்தும் காப்பகத்துக்கு அனுப்பி வைத்ததாகவும், அதில் 11 பேர் தப்பி ஓடி விட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கெடார் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆவணங்களை செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி, கஞ்சனூர் இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரேவதியிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் விசாரணையை தொடங்கினார்கள்.

    நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர்கள் ரேவதி, குமார், தனலட்சுமி, கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய குழுவினர் குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு சென்றனர்.

    இவர்களுடன் தடயவில் துணை இயக்குனர் சண்முகம் தலைமையிலான குழுவினரும் சென்றனர். அவர்கள் ஆசிரமத்தில் சோதனை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் மீட்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின் அரசு அனுமதியுடன் இயங்கும் வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

    அதன்படி கடலூர் புதுப்பாளையத்தில் அரசு நிதி உதவியுடன் இயங்கி வரும் ஓயாசிஸ் தொண்டு நிறுவனத்தின் கருணா மனநல காப்பகம் மற்றும் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டையில் இயங்கி வரும் டாக்டர் தவராஜ் மனநல காப்பகம் ஆகிய 2 இடங்களில் குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 23 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஒரு ஆண் குழந்தை, 7 பெண்கள் உள்பட 28 பேர் 2 வேன்களில் சென்னை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 23 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

    Next Story
    ×