என் மலர்
தமிழ்நாடு

பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
- ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்தார்.
- ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தடை காரணமாக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும், கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்தார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியக்குடி, உப்பூர், ஏர்வாடி, வாலிநோக்கம், மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தடை காரணமாக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களின் 1,200 விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
புயல் எச்சரிக்கை காரணமாக பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் (6-ந்தேதி) 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று அங்கு 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.