என் மலர்
தமிழ்நாடு
பச்சைநிற ஆவின் பால் வினியோகம் 50 சதவீதம் குறைப்பு: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு
- ஆவின் நிர்வாகம் இரட்டை வேடம் போட்டு, மக்களை ஏமாற்றும் செயலில், முறைகேட்டில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்கிறது.
- ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தை தமிழகம் முழுவதும் படிப்படியாக ஆவின் நிர்வாகம் குறைத்து வந்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகரில் உள்ள நேரடி ஆவின் பாலகங்களுக்கு அக்டோபர் 1-ந் தேதி முதல் 4.5சதவீதம் கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தை எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி 50 சதவீதம் குறைத்து விநியோகம் செய்த நிலையில், மொத்த விநியோகஸ்தர்கள் வாயிலாக பால் முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தையும் நாளை (அக்டோபர்-3) முதல் 50சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது பால் முகவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் ஆவின் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகள் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லல்பட்டு வருவதோடு, அதிக விலை கொண்ட தனியார் நிறுவனங்களின் பாலினை வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சமன்படுத்தப்பட்ட பால் என்றால் 3.0 சதவீதம் கொழுப்பு சத்தும், 8.5 சதவீதம் திடசத்தும் இருக்க வேண்டும் என்கிற நிலையில் ஊதா நிற பாக்கெட்டில் "செறிவூட்டப்பட்ட பசும்பால்" என அறிமுகம் செய்து விட்டு, தற்போது அதனை "டிலைட் பால்" என மாற்றியிருப்பதும், ஏற்கனவே நீல நிற பாக்கெட்டில் சமன்படுத்தப்பட்ட பால் விற்பனையில் இருக்கும் போது தற்போதைய ஊதா நிற பாக்கெட் பின்புறமும் "சமன்படுத்தப்பட்ட பால்" என போட்டிருப்பதன் மூலம் ஆவின் நிர்வாகம் இரட்டை வேடம் போட்டு, மக்களை ஏமாற்றும் செயலில், முறைகேட்டில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்கிறது.
ஏற்கனவே 5 சதவீதம், 10 சதவீதம், 20 சதவீதம் என நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தை தமிழகம் முழுவதும் படிப்படியாக குறைத்து வந்துள்ள ஆவின் நிர்வாகம் தற்போது சென்னை மாநகரில் ஒரேயடியாக 50 சதவீதம் குறைத்துள்ளதை வைத்துப் பார்க்கும்போது தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக 1 சதவீதம் கொழுப்பு சத்து குறைவான ஊதா நிற பாக்கெட்டினை விற்பனை செய்து, மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்திட திட்டமிட்டு வருவதாகவே தெரிகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள பால் பாக்கெட்டுகளின் கொழுப்பு சத்து அளவையும், பால் பாக்கெட்டில் பாலின் அளவையும் குறைத்து, அதன் மூலம் லிட்டருக்கு முதல் ரூ.8 வரை மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்துவது போன்றவற்றை செய்வதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.