search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தெருநாய் கடித்து காயமடைந்த தாய்-மகளுக்கு சிகிச்சை
    X

    தெருநாய் கடித்து காயமடைந்த தாய்-மகளுக்கு சிகிச்சை

    • தாய், மகள் இரண்டு பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • தெரு நாய்கள் தொல்லை மற்றும் அட்டகாசம் அதிகளவில் இருந்து வருகிறது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் உள்ள பாரத் நகரை சேர்ந்தவர் நாகராஜ், இவர் கம்பி கட்டும் தொழிலாளி ஆவார். இவரது மனைவி ஜோதி (35). இவர்களுக்கு 4 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இதில் மூத்த மகளான தன்யா ஸ்ரீ என்ற சிறுமி, நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று குழந்தை தன்யா ஸ்ரீயை துரத்தி துரத்தி கடித்தது. இதனை பார்த்து . அதிர்ச்சியடைந்த அவளது தாய் ஜோதி, நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற போராடினார். அப்போது, அவரையும் அந்த நாய் கடித்து விட்டது.

    தெரு நாய் கடித்ததில் தாய், மகள் என 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தெரு நாயை விரட்டி விட்டு, படுகாயம் அடைந்த தாய், மகள் இரண்டு பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஓசூர் மாநகர பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை மற்றும் அட்டகாசம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தெருவில் விளையாடும் குழந்தைகள், தெருவில் நடந்து செல்வோர் என பொதுமக்களை நாள்தோறும் அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×