என் மலர்
தமிழ்நாடு
சிவகங்கை அருகே ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி நிறைமாத கர்ப்பிணி-தாய் பலி
- நிவேதா பிரசவ வலியால் துடித்ததால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மலையரசன் ஆம்புலன்சை விரைந்து ஓட்டிச் சென்றார்.
- ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி நிவேதாவும், அவரது தாயும் இறந்த செய்தி அவரது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள நெஞ்சத்தூரைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி நிவேதா (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு இன்று அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இளையான்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் நிவேதாவை 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக வீட்டில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்தது. மருத்துவ உதவியாளர் திருச்செல்வி நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்துக்காக ஆம்புலன்சில் ஏற்றினார். அவருடன் நிவேதாவின் தாய் விஜயலட்சுமி (55), உறவினர் சத்யா ஆகியோர் உடன் சென்றார். விளத்தூரை சேர்ந்த மலையரசன் என்பவர் ஆம்புலன்சை ஓட்டினார்.
நிவேதா பிரசவ வலியால் துடித்ததால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மலையரசன் ஆம்புலன்சை விரைந்து ஓட்டிச் சென்றார். இளையான்குடி சாலை செங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
வேகத்தில் ரோட்டோர மரத்தில் ஆம்புலன்ஸ் பயங்கரமாக மோதியது. விபத்தில் ஆம்புலன்சில் இருந்த நிவேதா, அவரது தாய் விஜயலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
வலியால் அலறி துடித்த நிவேதாவும், அவரது தாய் விஜயலட்சுமியும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் மலையரசன், உதவியாளர் திருச்செல்வி, சத்யா ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகங்கை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிவேதா, விஜயலட்சுமி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் உட்பட 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி நிவேதாவும், அவரது தாயும் இறந்த செய்தி அவரது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்று குழந்தை பிறந்து விடும் என்ற சந்தோஷத்தில் இருந்த நிவேதாவின் குடும்பத்தினருக்கு இந்த செய்தி இடியை இறக்கியது. நிவேதா மற்றும் அவரது தாயின் உடல்களை பார்த்து அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.