search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மெட்ரோ ரெயில் பணியால் மாற்றம்- தி.நகரில் போக்குவரத்து நெரிசலில் தினமும் சிக்கி திணறும் மக்கள்
    X

    மெட்ரோ ரெயில் பணியால் மாற்றம்- தி.நகரில் போக்குவரத்து நெரிசலில் தினமும் சிக்கி திணறும் மக்கள்

    • தியாகராய ரோடு முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் அந்த பகுதியில் வாகன நெரிசல் அதிகம் ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் 2-வது திட்டப் பணிகள் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரெயில் பணியால் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் இடையூறு இல்லாமல் பணிகளை விரைவாக செய்ய மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

    தியாகராயநகர் பனகல் பூங்கா-நந்தனம் சிக்னல் இடையே மெட்ரோ ரெயில் பணிகள் தற்போது தொடங்கி உள்ளதால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் சனிக்கிழமை இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    பொதுமக்கள் அதற்கேற்ப பழகிக்கொள்வதற்காக ஒரு வாரம் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. சில சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

    தண்டபாணி தெரு, நந்தனம்-பனகல் பூங்கா வரை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. தியாகராய நகர் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியுடன் பள்ளிகளும் நிறைய உள்ளன. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் தடுமாறுகிறார்கள்.

    போக்குவரத்து மாற்றத்தால் வெங்கடநாராயணா ரோடு, தியாகராயரோடு, பிரகாசம் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த சாலையை கடக்க வழக்கமான நேரத்தைவிட கூடுதலாக 20 முதல் 30 நிமிடம் வரை ஆகிறது.

    தியாகராய ரோடு முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்தவும், பொதுமக்களை ஏற்றி, இறக்கிவிட்டு செல்லவும் அங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் அந்த பகுதியில் வாகன நெரிசல் அதிகம் ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து மாற்றம் செய்த முறை சரியல்ல. போக்குவரத்து வல்லுனர்கள் மூலம் ஆய்வு செய்து மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து போக்குவரத்து இணை கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், 'சோதனை அடிப்படையில் தான் தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஆலோசனைகள், கருத்துக்கள் ஆய்வு செய்து செய்யப்படும்.

    எழுத்து மூலமாகவோ, இ-மெயில் வழியாகவோ, சமூக வலைதளங்கள் வழியாகவோ கருத்துக்களை தெரிவிக்கலாம். எந்த பகுதியில் பாதிப்பு உள்ளது என்பதை ஆய்வு மாற்றம் செய்யலாம்' என்றார்.

    பனகல் பூங்காவில் விரைவில் சுரங்கப்பாதை தோண்டும் பணி தொடங்க இருப்பதால் பணிகள் தீவிரமாக நடைபெறும். அதனால் போக்குவரத்து மாற்றம் என்பது மெட்ரோ ரெயில் முக்கிய பணிகள் முடியும் வரை பின்பற்றப்படும். அதுவரையில் பொதுமக்களுக்கு சிரமங்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×