search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த திட்டமிடுபவர்களை கண்காணித்து தடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
    X

    அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த திட்டமிடுபவர்களை கண்காணித்து தடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

    • சென்னை உள்ளிட்ட பல மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் தரக்கூடிய ஒன்றாக இருப்பது போக்குவரத்து நெரிசல்.
    • பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்கக்கூடாது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் மாநாடு இன்று தொடங்கியது.

    முதலில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளடக்கிய கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுப் பணியை மேற்கொண்ட போதும்-மாவட்ட கலெக்டர்களை-காவல் துறை கண்காணிப்பாளர்களை நான் சந்தித்து இருக்கிறேன். தொடர்ச்சியாக உங்களை நான் சந்தித்து வருகிறேன்.

    இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், நாம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொள்ள இருக்கிறோம். இங்கே கூடியுள்ள நீங்கள் அனைவரும் அரசுக்கு உங்களது ஆலோசனைகளை, எந்தவித தயக்கமுமின்றி, மக்கள் நலன் ஒன்றையே மையமாகக் கொண்டு வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இன்று காலையில் நடைபெறும் இந்த அமர்வில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்து நாம் விவாதிக்க இருக்கிறோம்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக்காட்டுவது முதலாவது இலக்கு!

    இரண்டாவது, பொது அமைதியைக் கெடுக்க நினைப்பவர்களை முழுமையாகத் தடுப்பது.

    அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளித்து விடக்கூடாது.

    பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனை தீவிரமாகக் கண்காணித்து தடுக்க வேண்டும்.

    கள்ளச்சாராயம், போதைப்பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும்! இது நம் எதிர்காலத் தலைமுறையையே சீரழிக்கிறது. இது சம்பந்தமான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

    மேலும், சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து, விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்யும் முயற்சியிலே முழுமையாக ஈடுபட வேண்டும்.

    சென்னை உள்ளிட்ட பல மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் தரக்கூடிய ஒன்றாக இருப்பது போக்குவரத்து நெரிசல். அதனைக் குறைப்பதற்கான ஒரு சிறப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

    பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்கக்கூடாது. குற்றவாளிகளை உடனே கைது செய்து, தண்டனை பெற்றுத் தருவதில் மும்முரம் காட்ட வேண்டும்.

    பட்டியலின பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை செயல்கள் குறித்து அம்மக்கள் மாவட்ட அலுவலர்களுக்கு அச்சமின்றி தகவல் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி எண்ணை மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து அவர்களுக்கு உதவிட வேண்டும்.

    சமீப காலத்தில், தூத்துக்குடி மாவட்டம், மொறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவர்கள் மற்றும் திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆகியோரின் கொலை வழக்குகளில் காவல்துறை விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தது பாராட்டத்தக்கது.

    முன்னுரையாக சில கருத்துகளை நான் கூறினேன். என் மனதின் எண்ணங்களை உங்களோடு நான் பகிர்ந்து கொண்டேன்.

    நான் குறிப்பிட்ட ஆலோசனைகள் பற்றியும்-இதனைத் தாண்டியும் பல்வேறு நடப்புகள் குறித்தும், அரசின் திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்று சேரவும் உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளையும் செயல்திட்டங்களையும் இங்கு வழங்குங்கள்.

    காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டமைப்பிற்கு வேண்டிய வசதிகள் குறித்து, இக்கூட்டம் முடிந்த பிறகு, துறைத் தலைவர்களிடம் நீங்கள் முறையிட்டு தீர்வு காணலாம். எனவே, மாவட்ட நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து மட்டும் இங்கே கருத்துகளைப் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மாநாட்டில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மற்றும் அரசுத் துறைச் செயலாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இன்றைய மாநாட்டில் மாவட்ட கலெக்டர்கள் தங்களது மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நிலை குறித்து விளக்கி கூறினார்கள்.

    இதே போல் போலீஸ் சூப்பிரண்டுகளும் தங்கள் மாவட்டங்களில் உள்ள குற்ற தடுப்பு விவரங்களை பட்டியலிட்டு பேசினார்கள்.

    அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை பேணி காப்பத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். பிரச்சினைகளை வரும்முன் கண்டறிந்து அவற்றை தீர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அதன் பிறகு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டு கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

    இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை போலீஸ் அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதிலும் முதலமைச்சர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொள்கிறார்.

    நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணியில் இருந்து மாவட்ட கலெக்டர்கள் மட்டும் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களின் செயல்பாடுகளை அறிந்து அவர்களுக்கு தக்க ஆலோசனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

    மாநாட்டில் சிறப்பாக செயல்படும் கலெக்டர்களுக்கு கேடயமும் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×