என் மலர்
தமிழ்நாடு
ஐ.எஸ். தீவிரவாதிகளின் கலவர பூமியாக கோவை, ஈரோடு, சேலம் மாறி வருகிறது: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
- இது தீவிரவாத செயல் என்று கூறுவதற்கு ஏன் மறுக்கிறீர்கள் என அண்ணாமலை கேள்வி
- ஒருவர் இறந்தால்தான் முதல்-அமைச்சர், உளவு துறை தோற்று விட்டது என்பதை ஒப்புக்கொள்ளவரா?
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை மாநகரம் என்பது பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி இருக்கிறது என்பது 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் அனைவருக்கும் தெரிய வந்தது. 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் அப்பாவிகள் 58 பேர் பலியானார்கள்.
2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தேசிய புலனாய்வு முகமை 5 பேரை கைது செய்தது. இதில் கைதான முகமது அசாருதீன், கேரளாவைச் சேர்ந்த அபுபக்கர் ஆகிய 2 பேர் ஈஸ்டர் பண்டிகையின்போது குண்டு வெடிப்பு நிகழ்த்திய ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஜக்ரன் ஹசீமுடன் தொடர்புடையவர்கள். இவர் பேஸ்புக் மூலம் நிறைய பேரை மூளைச்சலவை செய்துள்ளார்.
2019 ஏப்ரல் மாதம் 21-ந்தேதி 3 தேவாலயங்கள், நட்சத்திர விடுதியில் நடத்திய தாக்குதலில் 269 பேர் இறந்தனர். முகமது அசாருதீன், அபுபக்கர் ஆகியோர் இன்று ஜெயிலில் உள்ளனர்.
அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விசாரணை நடத்தியபோது அதில் ஜமேசா முபினும் ஒருவர். இவர்தான் கடந்த 23-ந்தேதி கோவையில் வெடித்து சிதறிய காரை ஓட்டி வந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இது தீவிரவாத செயல் என்று கூறுவதற்கு ஏன் மறுக்கிறீர்கள்.
ஜமேசா முபின் 2 நாட்களுக்கு முன்பு தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசை மாற்றியுள்ளார். அதில், எனது இறப்பு செய்தி தெரிந்தவுடன் எனது தவறை மன்னித்து விடுங்கள். எனது குற்றத்தை மறந்து விடுங்கள். எனது இறுதி சடங்கில் கலந்து கொள்ளுங்கள். எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று ஆங்கிலத்தில் வைத்துள்ளார்.
இது தற்கொலை படை தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தும் வார்த்தை. அக்டோபர் 21-ந்தேதி இதை அவர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் வைத்துள்ளார். சி.சி.டி.வி.யில் அவரது வீட்டில் இருந்து 2 சிலிண்டர்களை நாலைந்து பேர் காரில் ஏற்றப்படும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களின் பெயர் விவரத்தையும் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. தற்கொலை படை தாக்குதல் என்று போலீசார் எந்த தகவலயும் கொடுக்கவில்லை.
ஜமேசா முபின் வீட்டில் 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம் எடுக்கப்பட்டது. அவர் தீபாவளி கொண்டாடவா? அதை வீட்டில் வைத்திருந்தார்.
ஜமேசா முபின் போலி குண்டுடன் சென்றார். ஆனால் தீவிரவாத தாக்குதல் இல்லை என்று டி.ஜி.பி. சொல்கிறார். தமிழக மக்களை போலீசார் முட்டாள் என்று நினைக்கிறார்கள். டி.ஜி.பியும், காவல் துறையினரும் குழந்தை தனமாக பேட்டி கொடுக்கிறார்கள்.
பால்ரஸ் குண்டு ஏன் வந்தது என்று பத்திரிகையாளர்கள் துருவி துருவி கேள்வி கேட்டும் சரியான பதில் சொல்லவில்லை. சம்பந்தமே இல்லாமல் ஏன் வண்டி வெடிக்க வேண்டும். உங்களிடம் சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளது. கோட்டைமேடு பகுதியில் இருந்து கார் கிளம்பியது முதல் கார் வெடித்தது வரை சி.சி.டி.வி. காட்சி உள்ளது.
தமிழகத்தில் இன்னும் குண்டு வெடிக்க வேண்டுமா? இன்னும் ஒருவர் இறந்தால்தான் முதல்-அமைச்சர், உளவு துறை தோற்று விட்டது என்பதை ஒப்புக்கொள்ளவரா? இதற்கு எவ்வளவு நாள் வேண்டும். பழைய தி.மு.க. ஆட்சியில் உளவு துறையில் சிறந்த அதிகாரிகள் இருந்தார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் உளவு துறையில் சிறந்த அதிகாரிகள் இருந்தார்கள்.
தமிழக உளவு துறையில் தற்போது சிறந்த அதிகாரிகள் இல்லை. தமிழக உளவு துறையில் சிறந்த அதிகாரிகளை முதல்-அமைச்சர் நியமிக்கவேண்டும். தமிழ் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு இடம் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
கொங்கு மண்டலமான கோவை, சேலம், ஈேராடு ஆகியவை தற்போது ஐ.எஸ். கலவர பூமியாக மாறி வருகிறது. இந்த தாக்குதலை தற்கொலை படை தாக்குதல் என்று தமிழக அரசு ஒத்துக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் உண்மையை வெளியே கொண்டுவர வேண்டிய பொறுப்பு பா.ஜனதாவுக்கு உள்ளது.
4 மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவனை போலீசார் கைது செய்தார்களா? இல்லையா? என்பதை தமிழக அரசு சொல்ல வேண்டும்.
அவர் ஒரு வேளையில் வாங்கி அதை எடுத்துக்கொண்டு இந்து பண்டிகையில் மக்கள் அதிக மாக சேரும்போது அந்த வண்டியை எடுக்க சென்று பாரிஸ் ஸ்டைல் தாக்குதல் போல நடத்த வண்டியை வாங்கினாரா இல்லையா? அந்த வண்டியை வாங்கிய பிறகு வெளியில் உள்ள ஏஜென்சி அவருக்கு எச்சரிக்கை செய்து ஈரோட்டில் ஒருவரை சேலத்தில் ஒருவரை தமிழக போலீஸ் கைது செய்ததா இல்லையா? அதை ஒத்துக்கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் மறைத்து மறைத்து எந்த விஷயத்தையும் வெளியில் தெரியாமல் செய்து வருகிறது. வேகத்தடை மீது கார் ஏறி இறங்கும் போது சிலிண்டர் தலை பகுதி கழன்று விட்டது. காரை ஓட்டியவர் வெளியே வந்து ஏன் கழன்றது என்று சரி செய்யும் போது அது வெடிக்கிறது.
இதை ஏன் காவல்துறை மறுக்கிறது. கோவையில் உள்ள ஒரு போலீஸ்காரருக்கு போன் செய்து கேட்டால் அவர் யார் விட்டில் இருந்து வண்டி கிளம்பியது. சி.சி.டி.வி. காட்சியில் என்ன இருக்கிறது? வண்டி வேகத்தடையில் ஏறி இறங்கும் போது சிலிண்டர் தலைப்பகுதி கழன்றதால் வெடித்தது என்கிறார்.
ஆனால் இதை தமிழக காவல்துறை மறுக்கிறது. முதல்-அமைச்சரும் மறுக்கிறார். இந்தியாவில் பெங்களூர், ஐதராபாத், புனே, டெல்லி, மும்பை பகுதியில் முன்பு 10 ஆண்டு காலம் தொடர்ந்து குண்டுவெடிப்பு நடந்தது.
தீபாவளி நேரத்தில் இதுபோல் நடந்தது. இதில் கொத்துக்கொத்தாக 100 பேர், 200 பேர், 300 பேர் இறந்ததை பார்த்தோம். 2008 நவம்பர் 26-ல் மும்பையில் தாக்குதல் நடந்தது. இது பெரிய தாக்குதல். எனவே தமிழகத்தில் ஐ.எஸ். தீவிர வாதிகள் ஊடுருவ முயற்சி செய்கிறார்களா? என்ற கேள்விக்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும். இது தற்கொலை படை தாக்குதல் என்று தமிழக அரசு ஒத்துக்கொண்டால் கோவைக்கு ஒரு என்.ஐ.ஏ. வேண்டும். இந்த விஷயத்தில் போலீசாரை மட்டும் குற்றம் சாட்டுவது வேதனையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.