என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2000 கோடி போதைப்பொருள்: விசாரணை நடத்த டெல்லி அதிகாரிகள் வருகை
    X

    குஜராத் கடல் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை காணலாம்

    தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2000 கோடி போதைப்பொருள்: விசாரணை நடத்த டெல்லி அதிகாரிகள் வருகை

    • ஈரானில் இருந்து இந்த போதைப்பொருள் கடத்தல் கப்பல் கடந்த வாரம் புறப்பட்டதாக தெரிகிறது.
    • போதைப்பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த பைகளில் பாகிஸ்தான் நிறுவனம் என்றுதான் பெயர் அச்சிடப்பட்டிருந்தது.

    சென்னை:

    இந்திய கடல் பகுதியில் சட்ட விரோதமாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடல் வழியே கப்பல் மற்றும் படகுகளில் கடத்தப்படும் போதைப்பொருட்களை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மடக்கி பிடித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் ஈரான் நாட்டில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் புகுந்துள்ள கப்பல் ஒன்றில் ஏராளமான போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டெல்லியில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இந்த தகவலை கசிய விட்டனர். இந்த போதைப்பொருள் கடத்தல் கப்பல் குஜராத் கடல் பகுதியில் வைத்து போதைப்பொருள் பண்டல்களை கைமாற்றி விட திட்டமிட்டிருப்பதையும் அதிகாரிகள் ரகசியமாக கண்டுபிடித்தனர்.

    இதை தொடர்ந்து என்.சி.பி. என்று அழைக்கப்படும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், இந்திய கடற்படையில் உள்ள உணவு மற்றும் சுங்கப் பிரிவு, குஜராத் போலீசார் ஆகியோர் கூட்டாக இணைந்து போதைப்பொருள் வேட்டையில் அதிரடியாக இறங்கினார்கள். ஆபரேஷன் சாகர் மந்தன் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த அதிரடி வேட்டையின்போது ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பல் ஆகியவை கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த நிலையில் குஜராத் கடல் பகுதியில் போதைப்பொருட்களை கடத்தி வந்த கப்பலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கப்பலில் மூட்டை மூட்டையாக பதுக்கி கடத்தி எடுத்து வரப்பட்ட போதைப்பொருட்கள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் போதைப்பொருட்களை மொத்தமாக பறிமுதல் செய்தனர். 3,300 கிலோ எடை கொண்ட இந்த போதைப்பொருட்களின் சர்வதேச மதிப்பு பல ஆயிரம் கோடிகளாகும்.

    போதைப்பொருட்கள் கப்பலில் இருந்தன. 3,100 கிலோ எடை கொண்ட சரஸ் ஹஷீஸ் என்கிற போதைப்பொருள், 158.3 கிலோ மதிப்பிலான மெத்த பெட்டமைன், 26.6 கிலோ ஹெராயின் ஆகியவை பிடிபட்டன. இந்த போதைப்பொருட்களை கடத்தி வந்த வெளிநாட்டினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடமிருந்து செயற்கைகோள் செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர 4 செல்போன்களையும் அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இவைகளையும் போலீசார் கைப்பற்றினார்கள். பிடிபட்ட 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஈரானில் இருந்து இந்த போதைப்பொருள் கடத்தல் கப்பல் கடந்த வாரம் புறப்பட்டதாக தெரிகிறது. அப்போதே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதனை மோப்பம் பிடித்து விட்டனர். இதை தொடர்ந்தே கப்பலின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பிடிபட்ட 5 பேரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் நடுக்கடலில் வைத்தே மீன் பிடி படகுகளில் போதைப்பொருட்களை கைமாற்றி விடுவதில் கைதேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

    இப்படி ஈரான் கப்பலில் பிடிபட்ட 3,300 கிலோ போதைப்பொருட்களையும் தமிழகத்துக்கு முக்கிய புள்ளி ஒருவருக்கு அனுப்பி வைக்க அவர்கள் திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மீன்பிடிபடகு மூலமாக இந்த போதைப்பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி வருவதற்கு கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் பெரிய அளவில் திட்டம் போட்டு செயல்பட்டுள்ளனர். அதற்குள் போதைப்பொருள்கள் அத்தனையும் மொத்தமாக பிடிபட்டு விட்டது.

    இருப்பினும் இந்த போதைப்பொருட்கள் தமிழகத்துக்கு யாருக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது? இந்த போதைப்பொருட்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக மேல் விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து அதிகாரிகள் விரைவில் சென்னைக்கு வர உள்ளனர். அவர்கள் சென்னைக்கு வந்து விசாரணை நடத்திய பிறகு 3,300 கிலோ எடை கொண்ட இந்த ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களும் தமிழகத்துக்கு யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது அம்பலமாகும் என தெரிகிறது.

    போதைப்பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த பைகளில் பாகிஸ்தான் நிறுவனம் என்றுதான் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. இதன் மூலமாக போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டிருக்கலாமா? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் ஈராக்கை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

    இதன் பின்னணி பற்றியும் விசாரித்து வரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தமிழக கடத்தல் கும்பலை பிடிக்கவும் வலை விரித்துள்ளனர்.

    Next Story
    ×