என் மலர்
தமிழ்நாடு

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. ஆறுதல் கூறிய காட்சி.
பள்ளிகளில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும்- செல்வப்பெருந்தகை
- தமிழகத்தில் காவல்துறையும் கல்வி துறையும் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததினால் நாங்குநேரி போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
- பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அரசு நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகிறது.
நெல்லை:
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திராவை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் குழுவின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது அவருடன் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் காவல்துறையும் கல்வி துறையும் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததினால் நாங்குநேரி போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் காலையில் நடக்கும் மாணவர் அசெம்பிளி கூட்டத்தில் கண்டிப்பாக மாணவ-மாணவிகள் ஜாதி மதம், பேதமின்றி சகோதரத்துவத்துடன் வாழ்வதாக உறுதிமொழி எடுத்துக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அரசு நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகிறது. உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து மருத்துவ குழுவினர் வருகை புரிந்து மருத்துவ பரிசோதனை செய்து வருவது பாராட்டுக்கு உரியது.
இவ்வாறு அவர் கூறினார்.