search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்களுக்கு சேவையாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி: அரசியல் பணி சவாலாக இருக்கிறது- உதயநிதி ஸ்டாலின்
    X

    மக்களுக்கு சேவையாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி: அரசியல் பணி சவாலாக இருக்கிறது- உதயநிதி ஸ்டாலின்

    • அரசியலை பொறுத்த வரை எனக்கு எப்போதும் நேர் மறையான எண்ணங்கள் உண்டு.
    • மனதில் பட்டதை பேசுபவன் நான், என்னை பொறுத்தவரை எது செய்தாலும் அதில் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவன்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

    கேள்வி: பிடித்த விளையாட்டு எது?

    பதில்:பேட் மின்டன் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நீண்ட நாட்களாக தொடர்ந்து விளையாடி கொண்டிருந்தேன். அதுதான் என்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டிருந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பணிகள் காரணமாக பேட் மின்டன் விளையாடுவது தடைபட்டு போனது. தொலைக் காட்சியில் ஐ.பி.எல். கிரிக்கெட்டை விரும்பி பார்ப்பதும் உண்டு.

    கே: அம்மா சமைப்பது பிடிக்குமா? மனைவி சமைப்பது பிடிக்குமா?

    ப: சந்தேகமே இல்லாமல் அம்மாதான். அவர் மிக சிறப்பாக சமையல் செய்வார். எல்லா உணவு வகைகளையும் ருசியாக சமைப்பதில் வல்லவர். அவர் வைக்கும் வத்தல் குழம்பு எனக்கு மிக மிக பிடிக்கும்.

    என் மனைவி கிருத்திகாவும் நன்றாக சமைப்பார். சில சமயம் பிரியாணி செய்ய ஆரம்பிப்பார். ஆனால் அது 'புலவ்'-ல் போய் முடிந்துவிடும்.

    கே: மகன், மகளுடன் செலவிட நேரம் கிடைக்கிறதா?

    ப: இப்போதெல்லாம் அரசியல் பணிகளுக்காக நிறைய பயணம் மேற் கொள்ளவேண்டி உள்ளது. எனவே அவர்களுடன் வீட்டில் பேசும் நேரம் குறைந்துவிட்டது. என்றாலும், தினமும் நான் என் மகளுடன் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசி விடுவேன்.

    எனது மகன் இன்பன் இங்கிலாந்தில் தொழில் மற்றும் விளையாட்டு நிர்வாக படிப்பு படித்து வருகிறார். அவர் சிறந்த கால்பந்து வீரர். இங்கிலாந்தில் உள்ள இந்திய கால்பந்து அணியில் விளையாடி வருகிறார்.

    கே: சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதற்கு வருத்தப்படுகிறீர்களா?

    ப: சினிமாவில் நான் பெரிய அளவில் எந்த சாதனையும் செய்யவில்லை. எனவே சினிமாவை விட்டு விலகியதில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஒவ்வொரு படத்திலும் இயக்குனர்கள் என்ன சொல்லி கொடுத்தார்களோ அதை மட்டுமே நான் செய்தேன்.

    கமல் சார் தயாரிப்பில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் அதற்குள் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டியது வந்துவிட்டது. எனவே அந்த படத்தில் நடிக்கவில்லை. அதுபோல எனது தயாரிப்பு நிறுவனத்தின் படங்களில் நடிப்பதில் இருந்தும் நான் முழுமையாக விலகி உள்ளேன்.

    கே: அரசியல் பணிகள் எப்படி இருக்கிறது?

    ப: அரசியல்வாதியாக இருப்பதும், அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்வதும் மனம் நிறைந்த மகிழ்ச்சியை தருகிறது. அரசியலை பொறுத்த வரை எனக்கு எப்போதும் நேர் மறையான எண்ணங்கள் உண்டு. அரசியல் பணிகள் உண்மையிலேயே மிகவும் சவாலாக இருக்கிறது.

    அரசியலில் நான் இன்னும் எந்த சாதனையையும் செய்யவில்லை. அமைச்சர் பதவியை முழுமையாக செயல்படுத்தி வருகிறேன். நேரம் கிடைக்கும் போது குடும்பத்தினரிடமும் செலவிட நேரத்தை ஒதுக்குவது உண்டு. சமீபத்தில் 2 நாள் ஓய்வு எடுத்து மனைவியுடன் சிங்கப்பூர் சென்று வந்தேன்.


    கே: உங்களுக்கு நெருக்கமானவர் யார்?

    ப: அன்பில் பொய்யா மொழி. எனக்கு ஏற்படும் அழுத்தங்கள் அனைத்தையும் உடைத்தெறிபவர் அவர்தான். என்னுடைய மிகச்சிறந்த நண்பர். நகைச் சுவை உணர்வு மிக்கவர். அவர் அருகில் இருந்தால் தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்.

    நான் எப்போதாவது அழுத்தத்தில் சிக்க நேரிட்டால் தயங்காமல் அவரிடம்தான் செல்வேன். மனதில் பட்டதை பேசுபவன் நான், என்னை பொறுத்தவரை எது செய்தாலும் அதில் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவன்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    Next Story
    ×