search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனமழையினால் வேகமாக நிரம்பும் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகள்
    X

    முழுகொள்ளளவை எட்டிவரும் மஞ்சளாறு அணை

    கனமழையினால் வேகமாக நிரம்பும் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகள்

    • பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.85 அடியாக உள்ளது.
    • கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை, சுருளி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை தேனி மாவட்டத்திலும், கேரளாவிலும் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெரியகுளம், மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக சோத்துப்பாறை அணை நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 அடி உயர்ந்தது.

    நேற்று 2-வது நாளாக கனமழை பெய்த நிலையில் ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளது. 126 உயரம் உள்ள அணையில் நீர்மட்டம் தற்போது 100.36 அடியாக உள்ளது. நீர்வரத்து 213 கனஅடியாகவும், திறப்பு 3 கனஅடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 61.29 மி.கனஅடியாக உள்ளது.

    இதேபோல மஞ்சளாறு அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 57 அடி உயரம் உள்ள அணையில் நீர்மட்டம் தற்போது 52.20 அடியாக உள்ளது. நீர்வரத்து 327 கனஅடியாக உள்ளது. இதனைதொடர்ந்து தேனி மாவட்டங்களில் உள்ள கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு உள்ளிட்ட மஞ்சளாறு ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டும்போது 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் நீர் அப்படியே உபரியாக திறந்துவிடப்படும்.

    தற்போது அணையின் நீர்இருப்பு 379.89 மி.கனஅடியாக உள்ளது.

    முல்லைபெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், கடந்த 2 நாட்களாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதாலும், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. 71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 65.16 அடியாக உள்ளது. வரத்து 3212 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 4666 மி.கனஅடி.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.85 அடியாக உள்ளது. வரத்து 3311 கனஅடி, நேற்று வரை 1800 கனஅடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 1555 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்இருப்பு 5598 மி.கனஅடியாக உள்ளது. கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை, சுருளி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பெரியாறு 59.4, தேக்கடி 89.4, கூடலூர் 7.4, வீரபாண்டி 6, வைகை அணை 5.4, மஞ்சளாறு 24, சோத்துப்பாறை 23, அரண்மனைப்புதூர் 6, போடி 43, பெரியகுளம் 47 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×