search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
    X

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    • தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
    • ஒகேனக்கல்லுக்கு வரும் விடுமுறை நாட்களில் கூட சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலாப் பணிகளுக்கு தொடர்ந்து 10-வது நாளாக குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் தடை தொடர்கிறது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

    இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 18000 கனஅடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகள் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 10-வது நாளாக நீடித்து வருகிறது.

    தொடர்ந்து காவிரி ஆற்றிலும், அருவிகளில் குளிக்க மாவட்ட தடை விதித்து இருப்பதால், ஒகேனக்கல்லுக்கு வரும் விடுமுறை நாட்களில் கூட சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    மேலும், சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் மீன் விற்பனை, கடைவீதியில் பொருட்கள் விற்பனை, சமையல் தொழிலாளர்கள், மசாஜ் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள் என அனைவரும் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    Next Story
    ×