search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்படுமா?
    X

    ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்படுமா?

    • ஜெயலலிதா பயன்படுத்திய கோடிக்கணக்கான மதிப்பிலான கைப்பற்றபட்ட பொருட்கள் அனைத்தும் கர்நாடகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடும் பட்சத்தில் அவரது நல விரும்பிகள் அதனை வாங்கி பொக்கிஷமாக பாதுகாத்து வைப்பார்கள்.

    சென்னை:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவரது வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் சசிகலா, இளவரசி ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இதையடுத்து கடந்த 1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையின்போது ஏராளமான பட்டுப்புடவைகள், செருப்புகள் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட 27 வகையான பொருட்கள் கைப்பற்றப்பட்டது. 11,344 சேலைகள், 1040 வீடியோ கேசட்டுகள், 750 ஜோடி காலணிகள், 250 சால்வைகள், 91 கைக்கடிகாரங்கள், 24 டேப்ரிக்கார்டர்கள், 2 ஆடியோ டிஸ்க், 4 சி,டி பிளேயர், 1 வீடியோ கேமரா, 8 வீடியோ காசட் ரிக்கார்டர்கள், 10 டி.வி.க்கள், 12 குளிர்சாதன பெட்டிகள், 3 இரும்பு பெட்டகங்கள், 44 ஏ.சி. எந்திரங்கள், 33 டெலிபோன் மற்றும் இண்டர்காம்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் 131 சூட்கேசுகள், 27 சுவர் கடிகாரங்கள், 86 மின் விசிறிகள், 146 அலங்கார சேர்கள், 34 டீப்பாய்கள், 31 டேபிள்கள், 24 கட்டில்கள், 9 டிரஸ்சிங் டேபிள்கள், 81 தொங்கும் விளக்குகள், 20 சோபா செட்கள், கண்ணாடிகளுடன் கூடிய 31 டிரஸ்சிங் டேபிள்கள், 215 படிக வெட்டு கண்ணாடிகள், ரொக்க பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன.

    ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கடந்த 2003-ம் ஆண்டு பெங்களுரு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து ஜெயலலிதா பயன்படுத்திய கோடிக்கணக்கான மதிப்பிலான கைப்பற்றபட்ட பொருட்கள் அனைத்தும் கர்நாடகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தற்போது இந்த பொருட்களை கர்நாடக அரசு பெங்களுருவில் உள்ள அரசு கருவூலத்தில் வைத்து பாதுகாத்து வருகிறது.

    இந்த நிலையில் பெங்களுருவை சேர்ந்த சமூக ஆர்வலரும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலருமான டி. நரசிம்ம மூர்த்தி என்பவர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கைப்பற்றபட்ட ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் 26 ஆண்டுகளாக கருவூலத்தில் இருப்பதால் அது வீணாக வாய்ப்பு உள்ளது. சேலைகள் பண்டல் கட்டி வைக்கப்பட்டு உள்ளதால் அதன் தரம் குறைய வாய்ப்பு உள்ளது. தோலால் ஆன செருப்புகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமாகும் சூழல் உள்ளது.

    இதை கருத்தில் கொண்டு உரிய சட்டத்திற்கு உட்பட்டு இந்த பொருட்களை ஏலத்தில் விட வேண்டும். ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடும் பட்சத்தில் அவரது நல விரும்பிகள் அதனை வாங்கி பொக்கிஷமாக பாதுகாத்து வைப்பார்கள்.

    இதனால் பொருட்கள் சேதமாவது தடுக்கப்படும். இந்த ஏலம் மூலம் கிடைக்கும் பணத்தை மக்கள் நல பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

    இந்த கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா சேகரித்து வைத்து இருந்த 11,344 சேலைகள், மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×