search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
    X

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

    • 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
    • சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 150-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 19-ந் தேதி 17 பேரும், 20-ந் தேதி 24 பேரும், 21-ந் தேதி 9 பேரும், நேற்று முன்தினம் 5 பேரும் என மொத்தம் 55 போ் உயிாிழந்தனா்.

    இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சோ்ந்த சவுந்தரராஜன் மகன் மதன் (வயது 46) என்பவா் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தொடர்ந்து மாலையில் சேஷசமுத்திரத்தை சேர்ந்த சாமுண்டி (70) என்பவர் சிகிச்சை இறந்து போனார்.

    இன்று காலை கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுவங்கூரை சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் ஒரு பெண் இறந்து போனார்கள். பிரேத பரிசோதனை அறிக்கைப்படி கள்ளச்சாராய பலி 59 என அரசு அறிவித்துள்ளது.

    ஏற்கனவே மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் (45), இளையராஜா (35) ஆகியோர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக அவர்களது குடும்பத்தினர் கூறியுள்ளதால் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 61 ஆக உயா்ந்துள்ளது.

    மேலும் இன்று காலை 7 மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனையில் 109 பேரும், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவ மனையில் 30 பேரும், புதுச்சரி ஜிப்மா் மருத்துவ மனையில் 12 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவ மனையில் 4 பேரும் என மொத்தம் 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் ஓய்வு பெற்ற ஐகோா்ட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையமும் விசாரித்து வருகிறது.

    Next Story
    ×