search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீண்டும் சூடுபிடிக்கும் கொப்பரை வர்த்தகம்: உடுமலை விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    உடுமலை பகுதியில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள கொப்பரைகள்.

    மீண்டும் சூடுபிடிக்கும் கொப்பரை வர்த்தகம்: உடுமலை விவசாயிகள் மகிழ்ச்சி

    • நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கொப்பரை வர்த்தகம் மீண்டும் சூடு பிடித்ததுடன் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
    • அரசு கொள்முதல் மையங்களில் மீண்டும் கொப்பரை கொள்முதல் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் கொப்பரை விலையை ஆதாரமாக கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தேங்காய் மற்றும் கொப்பரை விலையில் மந்தநிலை நிலவுகிறது. தென்னை சாகுபடியில் வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் போன்ற காரணங்களால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்த நிலையில் தேங்காய் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    கடந்த சில மாதங்களாக ஒரு தேங்காய் விலை ரூ.10 க்கும் குறைவாக இருந்தது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் அதிக உற்பத்தி இருக்கும் சீசனில் தேங்காய் விற்பனை செய்யாமல் தோட்டங்களிலேயே இருப்பு வைத்தனர். இவ்வாறு பல லட்சம் தேங்காய்கள் உடுமலைப் பகுதியில் விற்பனையாகாமல் இருப்பு செய்யப்பட்டது. கொப்பரை உற்பத்திக்கான உலர் கலங்களிலும் உற்பத்தி குறைக்கப்பட்டு வர்த்தகம் பாதித்தது.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கொப்பரை வர்த்தகம் மீண்டும் சூடு பிடித்ததுடன் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக காங்கேயம் சந்தை அடிப்படையில் கொப்பரை விலையும் ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் இருப்பு வைத்த தேங்காய்களை விற்பனை செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக வர்த்தகத்தில் நிலவிய தொய்வு காரணமாக தேங்காய் விற்பனை செய்யவில்லை. வழக்கமாக அக்டோபர் மாதத்தில் தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி குறைவாகவே இருக்கும். இதனால் உலர் களங்களுக்கு தேவை அதிகரித்து தேங்காய் விலை பல மடங்கு ஏறும். ஆனால் நடப்பாண்டு அதிக காய்கள் இருப்பு வைக்கப்பட்டதால் கொப்பரை தேங்காய் விலையில் உடனடியாக மாற்றம் ஏற்படாமல் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது.

    தற்போது பரவலாக துவங்கி உள்ள பருவமழையால் தேங்காய் பாதிப்பதை தவிர்க்கவும் விற்பனைக்கு ஆர்வம் காட்ட துவங்கியுள்ளோம். இந்த ஆண்டு வறட்சியால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கருகி தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    அரசு கொள்முதல் மையங்களில் மீண்டும் கொப்பரை கொள்முதல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதேபோல் தென்னை நார் உற்பத்தி தொழிலை "ஆரஞ்சு" வகைப்படுத்திய உத்தரவை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திரும்ப பெற்றுள்ளது. இதனால் நார் உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்திக்கு மூலப்பொருளான தேங்காய் மட்டைக்கும் விலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவ்வாறு தேங்காய் மற்றும் கொப்பரை விலை உயர்வுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×