search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    3 இடங்களில் மண்சரிவு- மலை ரெயில் சேவை இன்று ரத்து
    X

    3 இடங்களில் மண்சரிவு- மலை ரெயில் சேவை இன்று ரத்து

    • கடந்த 2 நாட்களாக குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
    • சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் குன்னூர் பகுதிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கல்லார் முதல் குன்னூர் வரை அடர்ந்த வனப்பகுதிக்குள் ரெயில் பயணிக்கும்.

    எனவே அந்த பகுதியிலுள்ள தண்டவாள பாதைகளில் அவ்வப்போது மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரெயில் தண்டவாளங்கள் சேதமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கல்லார்-குன்னூர் இடையேயான வனப்பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரெயில் பாதையில் கல்லார் முதல் ஹில்கிரோ வரை அடுத்தடுத்து 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதம் அடைந்து உள்ளன.

    இந்த நிலையில் மலைரெயில் தண்டவாள பாதைகள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கும் வகையில், ரெயில்வே ஊழியர்கள் ரோந்து மேற்கொண்டனர். அப்போது மேற்கண்ட பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை குன்னூருக்கு புறப்பட்டு சென்ற மலைரயில், கல்லார் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த ரெயில் மீண்டும் மேட்டுப்பாளையத்திதை வந்தடைந்தது.

    தொடர்ந்து மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான மலை ரெயில் போக்குவரத்து இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மேலும் சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×