என் மலர்
தமிழ்நாடு

சனாதனம் பற்றி பேசிய அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறிய காவல்துறை: நீதிபதி

- பல்வேறு கோட்பாடுகள், நம்பிக்கைகள் கொண்ட பல்வேறு மக்கள் வாழும் நாடு என்ற அடையாளத்தை நம் நாடு பெற்றுள்ளது.
- எந்த மதத்துக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் எப்போதும் அனுமதிக்காது.
சென்னை:
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதன தர்மத்துக்கு எதிராக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சனாதன ஒழிப்பு பற்றி பேசிய அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், 'மாதவரம் பால் பண்ணை பகுதியில் உள்ள அரங்கத்தில் திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த போலீசார் தனக்கு அனுமதி வழங்கவில்லை. எனவே மாநாட்டுக்கு அனுமதி வழங்க கோரி ஆவடி போலீசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுபற்றி போலீசாரிடம் நீதிபதி விளக்கம் கேட்டார். அதற்கு போலீசார் விளக்கம் அளித்தனர்.
போலீசார் அளித்த விளக்கத்துக்கு பிறகு நீதிபதி ஜெயச்சந்திரன் தனது உத்தரவில் கூறியதாவது:-
பல்வேறு கோட்பாடுகள், நம்பிக்கைகள் கொண்ட பல்வேறு மக்கள் வாழும் நாடு என்ற அடையாளத்தை நம் நாடு பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் கெட்ட எண்ணத்தை உருவாக்கும் பிரசாரம் செய்ய இந்த ஐகோர்ட்டின் உதவியை யாரும் நாட முடியாது. இது போன்ற கூட்டத்தை நடத்துவது அடிப்படை உரிமை என்று மனுதாரர் கூறினாலும், இந்த நாட்டில் மக்களின் நம்பிக்கைகளை, கோட்பாடுகளை ஒழிக்கும் விதமாக பிரசார கூட்டம் நடத்துவதற்கு இந்த கோர்ட்டு அனுமதி வழங்காது. மக்களின் நம்பிக்கைகள், கோட்பாடுகளை அழிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர்கள் பேசியது தொடர்பாக எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இப்படி பேசினால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற அடிப்படையில் தான் திராவிட கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கும், கூட்டம் நடத்துவதற்கும் அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.
அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது எந்தவித வேறுபாடு இல்லாமலும், சாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படுத்தாமலும் கவனத்துடன் பேச வேண்டும். எந்த சித்தாந்தத்தையும் யாராலும் ஒழிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என்று பேசுவதற்கு பதிலாக சமூகத்தில் தீய பழக்கங்களாக உள்ள போதை, மது போன்றவற்றை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும். சமுதாயத்தை சீரழிக்கும் ஊழல், தீண்டாமை கொடுமை உள்ளிட்ட சமுதாய கொடுமைகளையும் அழிப்பதற்கு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த மதத்துக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் எப்போதும் அனுமதிக்காது. சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமலும், வழக்கு பதிவு செய்யாமலும் இருந்த போலீசார் தவறு இழைத்து இருக்கிறார்கள். சனாதன ஒழிப்பு பற்றி பேசிய அமைச்சர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அமைச்சர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது அவர்கள் கடமையில் இருந்து தவறியது போன்றதாகும். அதன் அடிப்படையில் தான் இந்த வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இதை அனுமதிக்கும் பட்சத்தில் சமூகத்தில் மீண்டும் ஒரு பதட்டமான சூழ்ந்லை ஏற்படுத்தக்கூடும். தற்போதைய நிலையில் இந்த மனுவை அனுமதிக்க முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறி இருந்தார்.