search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குண்டு காயங்களுடன் தப்பிய மாவோயிஸ்டுகள்: ஆஸ்பத்திரிகளில் சந்தேக நபர்கள் சிகிச்சை பெற்றால் தகவல் தர உத்தரவு
    X

    கோவை க.க.சாவடி சோதனைச்சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காட்சி

    குண்டு காயங்களுடன் தப்பிய மாவோயிஸ்டுகள்: ஆஸ்பத்திரிகளில் சந்தேக நபர்கள் சிகிச்சை பெற்றால் தகவல் தர உத்தரவு

    • கோவையின் பல்வேறு இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கேரளா துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் தனியார் கிளினிக் மற்றும் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளது.

    கோவை:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், அய்யன்குளம் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர்.

    தொடர்ந்து அதிரடிப்படை போலீசார் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்த இடத்தில் சோதனை செய்து பார்த்தனர். அப்போது 2 பேர் குண்டுகாயங்களுடன் தப்பிச்சென்றது தெரியவந்தது.

    கேரளாவில் போலீசார் தேடுதல் வேட்டை அதிகரித்து உள்ளது. எனவே அவர்கள் எல்லையோர சோதனைச்சாவடி வழியாக தமிழகத்துக்குள் புகுந்து, இங்கு உள்ள ஏதேனும் ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வாய்ப்புகள் உள்ளன என்று தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இதையடுத்து தமிழகம்-கேரளாவில் உள்ள எல்லையோர சோதனைச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கேரள மாநிலத்தில் இருந்து வாளையார், வேலந்தாவளம், க.க.சாவடி வழியாக கோவை வரும் வாகனங்கள் மற்றும் கேரளாவில் இருந்து மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புணி வழியாக பொள்ளாச்சி வரும் வாகனங்கள் ஆகியவை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    இதுதவிர தமிழகம்-கேரளா மாநில எல்லையோரத்தில் அமைந்து உள்ள ஆனைக்கட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 14 சோதனைச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய 90 போலீசார் உள்பட 160 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே கோவையின் பல்வேறு இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு சிகிச்சை பெறவரும் நோயாளிகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    மாநகர எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    கேரளா துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் தனியார் கிளினிக் மற்றும் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளது. எனவே கோவை மாநகரில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களுக்கும் யாராவது குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற வந்தாலோ, சந்தேக நபர்கள் சிகிச்சை பெற்றாலோ உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×