என் மலர்
தமிழ்நாடு
எந்த ஒரு கட்சியும் மதவாத கட்சியாக இயங்க அனுமதிக்க கூடாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- வரலாறு என்பது வேலைக்காக, படிப்புக்காக, பட்டத்திற்காக, சம்பளத்துக்காக மட்டும் அல்ல, நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக வரலாற்றைப் படித்தாக வேண்டும்.
- கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழர்களின் கடல் கடந்த பயணம் மற்றும் அவர்களின் வெற்றிகளை ஆவணப்படுத்தும் விதமாக ஓர் அருங்காட்சியகம் அமைக்க இருக்கிறோம்.
சென்னை:
தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இந்திய வரலாற்றுப் பேரவையின் 81-வது மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
வரலாற்றைப் படித்து என்ன ஆகப் போகிறது? அதைப் படித்தால் வேலை கிடைக்குமா? சம்பளம் கிடைக்குமா? என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது. வரலாறு என்பது வேலைக்காக, படிப்புக்காக, பட்டத்திற்காக, சம்பளத்துக்காக மட்டும் அல்ல, நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக வரலாற்றைப் படித்தாக வேண்டும்.
கடந்த கால வரலாற்றை படிப்பவர்களால் மட்டும் தான், நிகழ்கால வரலாற்றை படைக்க முடியும்; எதிர்காலத்தைக் கணிக்க முடியும். அப்படி படிக்கப்படும் வரலாறு, அறிவியல்பூர்வமான உண்மையான வகையில் அது அமைந்திட வேண்டும். கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது. அதனை ஏற்கக்கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதை ஏற்றுக் கொள்ளாது.
இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான். கல்வி, மொழி, பண்பாடு, அதிகாரம், பொருளாதாரம், நிர்வாகம் அனைத்திலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகள், காப்பாற்றப்பட வேண்டும்.
1994-ம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை, நான் இங்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
மதச்சார்பின்மை என்பது, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையாகும். அதை எந்த வகையிலும் மீறுவதை அனுமதிக்க முடியாது. எந்தவொரு கட்சியும் மதவாதக் கட்சியாக இயங்க அனுமதிக்கக் கூடாது. பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே பிளவை உண்டாக்கி, அவர்களுக்குள்ளேயே படுகொலைகளைத் தூண்டுகிற சக்திகளை இயங்க அனுமதித்தால், ஜனநாயகமே இல்லாமல் போய்விடும்.
ஒரு மதச்சார்பற்ற அரசு அந்த சக்திகளைக் கட்டுப்படுத்தி அழித்து, சமுதாயத்தை முந்தைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும்" என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.
இந்தியாவின் நிலப்பரப்பு ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. இடையில் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டதே வேற்றுமைகள். இந்த வேற்றுமைகளை, ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் பொய் வரலாறுகளைப் புறந்தள்ளி மக்களை மையப்படுத்திய உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும். நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள்தான். ஆனால் பழமைவாதிகள் அல்ல!
அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில்தான் எங்கள் வரலாற்றுப் பெருமைகளைப் பேசுகிறோம்.
* கீழடி, * அழகன்குளம், * கொற்கை, * சிவகளை, * ஆதிச்சநல்லூர், * கொடு மணல், * மயிலாடும்பாறை, * கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் விரிவான ஆய்வுகளை தமிழ்நாடு அரசு தொடங்கி இருக்கிறது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே, இந்த ஆய்வுகளை விரிவுபடுத்த நம்முடைய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் ஏழு இடங்களில், இதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கீழடியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழர்களின் கடல் கடந்த பயணம் மற்றும் அவர்களின் வெற்றிகளை ஆவணப்படுத்தும் விதமாக ஓர் அருங்காட்சியகம் அமைக்க இருக்கிறோம்.
பொருநை நாகரிகத்தை நெல்லையில் காட்சிப்படுத்த இருக்கிறோம். இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய வரலாற்று உணர்வை விதைத்திருக்கிறது.
இவற்றை மேலும் செழுமைப்படுத்திட, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை, இந்திய வரலாற்று காங்கிரசு அமைப்பு வழங்கினால், அதனையும் ஏற்று நாங்கள் செயல்படுத்த இருக்கிறோம். எனவே, வரலாற்றைப் படிப்போம், மீண்டும் சொல்லுகிறேன் வரலாற்றைப் படிப்போம், வரலாற்றைப் படைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி., தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ, கலெக்டர் ராகுல்நாத் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் ஆகிய இடங்களில் கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.