என் மலர்
தமிழ்நாடு

இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்: ஒரே நாளில் 1 லட்சம் வீடுகளில் திண்ணைப் பிரசாரம்
- ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை குறித்து சில நிமிட நேரங்கள் விளக்கி பேசுகின்றனர்.
- 26-ந் தேதி ஒரே நாளில் மட்டும் 1 லட்சம் வீடுகளுக்கு சென்று தி.மு.க.வினர் திண்ணைப் பிரசாரம் செய்துள்ளனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையை முதலில் தொடங்கிய தி.மு.க. பிப்ர வரி 16, 17, 18-ந்தேதிகளில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக மிகப்பிரமாண்டமாக கூட்டங்களை நடத்தி முடித்தது. இந்த கூட்டங்கள் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக 'இல்லந்தோறும் ஒலிக்கும் ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு செய்து வரும் அநீதிகளை ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், நேற்று முன்தினம் முதல் (26-ந் தேதி) 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் திண்ணைப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் தி.மு.க. பெறுகிற வெற்றி மகத்தான வெற்றியாக இருக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்.
அதன் அடிப்படையில் கட்சி நிர்வாகிகள் திண்ணை பிரசாரத்தை எளிமையாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 26-ந் தேதி முதல் தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிய செயலாளர்கள், மாநகர, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாக சென்று துண்டறிக்கைகளை வழங்கி ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரை குறித்து சில நிமிட நேரங்கள் விளக்கி பேசுகின்றனர்.
அப்போது பாரதிய ஜனதா கட்சியையும், அ.தி.மு.க.வையும் விமர்சித்து பேசுகின்றனர்.
26-ந் தேதி ஒரே நாளில் மட்டும் 1 லட்சம் வீடுகளுக்கு சென்று தி.மு.க.வினர் திண்ணைப் பிரசாரம் செய்துள்ளனர். 'பாசிசம் வீழட்டும்', 'இந்தியா வெல்லட்டும்' ஸ்டிக்கர்களையும் வீடுகள் முன்பாக ஒட்டி வருகின்றனர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் இன்று முழுவதும் கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று திண்ணைப் பிரசாரம் செய்து வருகின்றனர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் திண்ணைப் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.