search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மும்பை ரெயிலை விபத்தில் சிக்க வைக்க சதி: அரியலூர் அருகே ரெயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு
    X

    மும்பை ரெயிலை விபத்தில் சிக்க வைக்க சதி: அரியலூர் அருகே ரெயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு

    • சுமார் 40 நிமிடம் தாமதமாக விருத்தாசலம் நோக்கி மும்பை ரெயில் புறப்பட்டு சென்றது.
    • உயர் அழுத்த மின் வயரில் சேலை சிக்கி கிடந்த இடத்தை ரெயில்வே உயர் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

    அரியலூர்:

    நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு செல்லும் சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் அரியலூர் அருகே பழைய பாம்பன் ஓடை என்ற இடத்தில் காட்டுப்பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது உயர் அழுத்த மின் கம்பியில் பச்சை நிற சேலையில் கல்லை கட்டிய நிலையில் தொங்கி கொண்டிருந்தது.

    இதனை கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

    பின்னர் என்ஜின் டிரைவர் மற்றும் உதவியாளர்கள், பயணிகள் ரெயிலில் இருந்து கீழே இறங்கி சேலை தொங்கிக்கொண்டு இருந்த இடத்திற்கு அருகில் சென்று பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக விருத்தாசலம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது, உயர் அழுத்த மின் வயரில் சேலை தானாக காற்றில் வந்து விழ வாய்ப்பில்லை என்றும், இது ரெயில் என்ஜினின் மேல் பகுதியில் உள்ள கம்பியும், மின்சார கம்பியும் உரசும்போது எளிதில் ரெயிலை தீ விபத்தில் சிக்க வைத்துவிடலாம் என்ற நோக்கில் சமூக விரோதிகள் செய்த சதியாக இருக்கலாம் என தெரிய வந்தது. இதற்கிடையில் சேலை தொங்கிய இடத்தில் இருந்து தீப்பொறி விழுவதை கண்ட பயணிகளும், அதிகாரிகளும் பதற்றம் அடைந்தனர்.

    பின்னர் ரெயில்வே ஊழியர்கள் நின்ற ரெயிலில் இருந்த நீண்ட கம்பியை எடுத்து வந்து சாதுரியமாக உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி இருந்த சேலையை அகற்றினர். இதையடுத்து சுமார் 40 நிமிடம் தாமதமாக விருத்தாசலம் நோக்கி மும்பை ரெயில் புறப்பட்டு சென்றது.

    சேலையில் கல்லை கட்டி ரெயிலை தீ விபத்தில் சிக்கவைக்க சதி திட்டம் தீட்டிய மர்ம ஆசாமிகளை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். என்ஜின் டிரைவர் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனிடையே உயர் அழுத்த மின் வயரில் சேலை சிக்கி கிடந்த இடத்தை ரெயில்வே உயர் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    சம்பவ இடம் காட்டுப்பகுதி என்பதால் அந்த வழியாக மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்று போலீசார் அந்த பகுதியில் முகமையிட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×