என் மலர்
தமிழ்நாடு
கள்ளுக்கான தடையை நீக்க கோரி ஜனவரி மாதம் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம்- நல்லசாமி அறிவிப்பு
- பனங்கள் ஒரு தடை செய்யக்கூடிய போதை பொருள் அல்ல.
- ஒரு மரத்துக்கள்ளை 48 நாட்கள் தொடர்ந்து பருகி வந்தால் பல நோய்கள் குணமாகும்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பனங்கள் ஒரு தடை செய்யக்கூடிய போதை பொருள் அல்ல. பாரம்பரியமான உணவு பொருளான கள் இறக்குவதற்கும், பருகுவதற்கும் அரசு விதித்துள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும். ஒரு மரத்துக்கள்ளை 48 நாட்கள் தொடர்ந்து பருகி வந்தால் பல நோய்கள் குணமாகும். எனவே தான் கள்ளுக்குத் தடை கூடாது என்கிறோம்.
கேரளாவை பின்பற்றி தமிழ்நாட்டிலும், மதுவிலக்கு மற்றும் மதுக்கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். 2023-24-ம் ஆண்டுக்கான மதுக்கொள்கையை முடிவு செய்வதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஜூலை 25-ந்தேதி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் 'கள்' இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் முக்கியத்துவம் அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. குறிப்பிட்ட நாட்களுக்குள் விற்பனை ஆகாமல் மீதமாகும் கள்ளை வீணாக்காமல், அதிலிருந்து வினிகர் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பொருட்களையும் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது. கள்ளுக்கடைகளை திறக்க கோருவதுவும், கள்ளுக்கு அரசிடம் அனுமதி கேட்பதுவும் அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 47-க்கு எதிரானதுடன் கள்ளுக்கடைக்கு தடை விதிக்கக்கூடாது.
இவற்றை முன்னிறுத்தி வருகிற ஜனவரி மாதம் 21-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 'கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.