என் மலர்
தமிழ்நாடு

நம்பியூர் அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்ற பெண் மாயம்
- மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் போட்டோவை மார்பிங் செய்ததை அறிந்த மோகனசுந்தரி அதிர்ச்சியில் மன உளைச்சலுக்கு ஆளானார்.
- வெங்கடாசலம் நம்பியூர் போலீசில் மாயமான மனைவியை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்துள்ளார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் இருகலூரை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (42). இவரது மனைவி மோகன சுந்தரி (39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நம்பியூர் அரசு போக்குவரத்துக்கு கழக கிளையில் வெங்கடாசலம் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனசுந்தரி ஆன்லைன் செயலி மூலமாக கடன் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் மோகனசுந்தரியின் செல்போனை ஹேக் செய்து அதில் இருந்த அனைத்து போன் நம்பர்களையும் எடுத்து அனைவருக்கும் அவரது போட்டோவை மார்பிங் செய்து அனுப்பி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மோகனசுந்தரி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக குழந்தைகளிடம் கூறிவிட்டு சென்ற மோகனசுந்தரி அதன் பின் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து வெங்கடாசலம் நம்பியூர் போலீசில் மாயமான மனைவியை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மோகன சுந்தரியை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நம்பியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.