என் மலர்
தமிழ்நாடு
சட்டக் கல்லூரிகளில் உள்ள காலி இடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
- 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் நிலைமை மோசமாக இருக்கிறது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சட்டக் கல்வி இயக்குனர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாட்டில் உள்ள 15 சட்டக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 20 இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு அதிகமான காலிப் பணியிடங்களை நிரப்பாதது தி.மு.க. அரசின் அக்கறையின்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஆசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால் சட்டக் கல்லூரிகளை மூடுவதே நல்லது என்று சென்னை உயர் நீதிமன்றம் குட்டு வைக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் நிலைமை மோசமாக இருக்கிறது.
முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, சட்டக் கல்லூரிகள் உட்பட அனைத்துக் கல்லூரிகளிலும் காலியாக உள்ள இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.