என் மலர்
தமிழ்நாடு

ஆம்னி பஸ் கவிழ்ந்து கிடப்பதை காணலாம்.
மேலூர் நான்கு வழிச்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து- 15 பேர் காயம்
- பஸ் இன்று அதிகாலை 4 மணி அளவில் மேலூர் நான்கு வழிச்சாலையில் மலம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
- மேலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயம் பாண்டியன், ஜெய கஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை நாகர்கோவிலை சேர்ந்த கணேசன் (வயது 48) என்பவர் ஓட்டி சென்றார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
அந்த பஸ் இன்று அதிகாலை 4 மணி அளவில் மேலூர் நான்கு வழிச்சாலையில் மலம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்ப்பாராதவிதமாக திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சின் டிரைவர், பஸ் பயணிகளான நெல்லையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(52), மணிமாறன் (36), விஜயா (59) உட்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து மேலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயம் பாண்டியன், ஜெய கஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.