என் மலர்
தமிழ்நாடு

பாலருவிக்கு செல்லும் பாதை மூடப்பட்டு இருப்பதை காணலாம்.
மழை இல்லாததால் வனவிலங்குகள் படையெடுப்பு: ஆரியங்காவு பாலருவி மூடப்பட்டது
- தற்போது போதிய மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது.
- வனப்பகுதியில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
செங்கோட்டை:
கேரள மாநிலம் ஆரியங்காவில் பாலருவி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் என்பதால் சுற்றுலா பயணிகள் எப்போதும் அதிகளவில் விரும்பி செல்வது வழக்கம்.
தற்போது போதிய மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. கோடை காலம் தொடங்கி உள்ளதையடுத்து குற்றாலம் மற்றும் ஜந்தருவிகளில் தண்ணீர் குறைய தொடங்கி உள்ளது. இதனால் அருகே உள்ள பாலருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
இங்குள்ள வனப்பகுதியில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால் அங்கிருந்து அரிய வகை வனவிலங்குகளுக்கோ, அருவியில் குளிக்க வரும் பயணிகளுக்கோ ஆபத்து வரலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.
எனவே பாலருவியை மூடிவிட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை முதல் மே மாத இறுதிவரை பாலரு விக்கு செல்லவோ, அருவியில் குளிக்கவோ சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
வன விலங்குகள் கோடை காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும். அவை பாலருவியில் விழும் குறைந்தளவு தண்ணீரை குடிக்க அருவி பகுதிக்கு படையெடுத்து வரும் என்பதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து பாலருவியை மூடியிருப்பதாக வனத்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
வருகிற மே மாதம் கடைசியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழையை பொறுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.