என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர கமல்ஹாசன் முடிவு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர கமல்ஹாசன் முடிவு](https://media.maalaimalar.com/h-upload/2022/11/17/1793143-kamalhaasan1.jpg)
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர கமல்ஹாசன் முடிவு
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனும் கூட்டணி அரசியலை விரும்புவது தெரிய வந்துள்ளது.
- பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல், 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் தனித்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்த நிலையில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்.
இது தொடர்பாக சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 85 மாவட்ட செயலாளர்கள், மாநில செயலாளர்கள், மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர். துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, கவிஞர் சினேகன், மூகாம்பிகை, முரளி அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர்கள் பாராளுமன்ற தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் நடவடிக்கை அமைய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். 2 தேர்தல்களில் செய்த தவறை வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் நாம் செய்துவிடக் கூடாது என்றும் நிர்வாகிகள் பேசினார்கள்.
தனித்து போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற முடியாததை சுட்டிக்காட்டியே நிர்வாகிகள் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்தனர்.
இதையடுத்து கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் 'கூட்டணி'யை பற்றி கவலைப்படாதீர்கள். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நீங்கள் சுறுசுறுப்பாகவும் நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். மக்களின் மதிப்பை பெறும் வகையில் அனைத்து பகுதிகளிலுமே நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
இதற்காக உங்கள் பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து அவைகளை சரி செய்வதற்கான பணிகளில் எப்போதும் போல தீவிரமாக செயல்படுங்கள். கிராமப் புறங்கள் தொடங்கி நகர் புறங்கள் வரையில் கட்சியை வலுப்படுத்தினால் தான் நம்மால் வெற்றி பெற முடியும்.
பாராளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது? என்பது பற்றி நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாமா? என்பது பற்றி நாம் தீவிரமாக ஆலோசித்து முடிவு செய்வோம். நீங்கள் கட்சி பணிகளில் வேகம் காட்டுங்கள். கூட்டணி அமைப்பது போன்ற மற்ற விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய ஓராண்டிலேயே 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கமல்ஹாசன் சந்தித்தார். அந்த தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. மக்கள் நீதி மய்யம் சார்பில் களம் இறங்கிய வேட்பாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் வாக்குகளை பிரித்தனர்.
2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் கமல் கட்சி வேட்பாளர்கள் சொல்லிக்கொள்ளும்படியே வாக்குகளை பெற்றனர். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றியை நழுவ விட்டார்.
இந்த நிலையில்தான் பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனும் கூட்டணி அரசியலை விரும்புவது தெரிய வந்துள்ளது.
பாரதிய ஜனதாவின் கொள்கைகளுடன் உடன்படாத காரணத்தாலேயே சட்டமன்ற தேர்தலில் அக்கட்சியின் வானதி சீனிவாசனை எதிர்த்து கமல்ஹாசன் போட்டியிட்டார்.
பாராளுமன்ற தேர்தலிலும் அது போன்ற ஒரு முடிவையே கமல்ஹாசன் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தோல்வியை தவிர்க்க 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பெரிய கூட்டணியில் இணைந்து போட்டியிட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே திரையுலகில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன், கமல்ஹாசன் இணைந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க.-காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க. கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட கமல்ஹாசன் திட்டம் வைத்துள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தன்னை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச்சென்ற கோவையிலேயே போட்டியிட கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.