என் மலர்
தமிழ்நாடு
மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் உயிரை மாய்த்த போலீஸ்காரர்- உருக்கமான தகவல்கள்
- செந்தில் குமாருக்கும், உமாதேவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- வீட்டுக்கு சென்ற உமாதேவி குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சித்தி வீட்டுக்கு சென்று விட்டார்.
சென்னை:
சென்னை நேரு ஸ்டேடியத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனால் விழா ஏற்பாடுகள் நடந்து வரும் நேரு உள் விளையாட்டு அரங்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு ஆயுதப்படை காவலர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியிலும் இரவு-பகலாக ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி ஆயுதப்படை போலீஸ்காரரான செந்தில்குமார் நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் முக்கிய பிரமுகர்கள் வரும் நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 12.45 மணியளவில் செந்தில்குமார் அங்குள்ள கழிவறைக்கு சென்று தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரேத பரிசோதனைக்காக செந்தில்குமாரின் உடல் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
போலீஸ்காரர் தற்கொலை தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். விடுமுறை கிடைக்காத காரணத்தால் பணிச்சுமை ஏற்பட்டு அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் காவலர் செந்தில்குமார் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
போலீஸ்காரரின் திடீர் தற்கொலையால் அவரது மனைவி உமாதேவி துயரத்தில் ஆழ்ந்துள்ளார். ஒரு வயது பெண் குழந்தையுடன் அவர் தவித்து வருகிறார்.
இதுதொடர்பாக உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
மதுரை மாவட்டம் செல்லூரைச் சேர்ந்த போலீஸ்காரர் செந்தில்குமாருக்கும் பழனியைச் சேர்ந்த உமா தேவிக்கும் இடையே திருமணமாகி இருவரும் கீழ்பாக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
உமாதேவி சென்னை ஐ கோர்ட்டில் டைப்பிஸ்டாக பணிபுரிந்து வரும் நிலையில் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. செந்தில் குமாருக்கும், உமாதேவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அடிக்கடி குடித்து விட்டு வந்து செந்தில்குமார் மனைவி உமாதேவியை அடித்து உதைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் உமாதேவி கீழ்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர். போலீஸ்காரர் செந்தில்குமாரையும், உமாதேவியையும் அழைத்து விசாரித்தனர். அப்போது இருவரிடமும் போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விசாரணையின்போது உமாதேவி, செந்தில்குமார் மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். தன்னை தினமும் செந்தில் குமார் அடித்து உதைப்பதால் என்ன செய்வதென்று தெரியவில்லை. இருப்பினும் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம். அறிவுரை கூறி அனுப்பி வையுங்கள் என்று தெரிவித்துள்ளார். போலீசாரும் செந்தில் குமாரை அழைத்து பேசினர். அப்போது தான் இனி ஒழுங்காக இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.அதன் பின்னர் வீட்டுக்கு சென்ற உமாதேவி பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி திருவெற்றியூரில் உள்ள சித்தி வீட்டுக்கு சென்று விட்டார்.
அதன் பின்னர் செந்தில் குமார் மனைவிக்கு போன் செய்து பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் சரியாக பேசவில்லை என்றும், இதன் காரணமாக காவலர் செந்தில் குமார் மன உளைச்சலில் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே காவலர் செந்தில்குமார், பிரிந்து சென்ற மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக உயர் அதிகாரிகளிடம் விடுமுறை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உடனடியாக விடுமுறை கிடைக்கவில்லை என்றும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா முடிந்த பிறகே விடுமுறை கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதுவும் அவர் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியானது.
இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் அளித்த விளக்கத்தில்,
போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டதற்கு விடுமுறை அளிக்காதது காரணம் இல்லை. ஆயுதப்படையில் விடுமுறைக்காக அதிகாரிகளை நேரில் சந்திக்க வேண்டியதில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்தாலே விடுமுறை கிடைத்து விடும். குடும்ப பிரச்சினை காரணமாகவே காவலர் செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிவித்தார்.