என் மலர்
தமிழ்நாடு
பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை
- பொங்கல் போனஸ் வழங்க தமிழக அரசு அதற்காக ரூ. 221 கோடி நிதி ஒதுக்கியது.
- 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் பொங்கல் கொண்டாட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் போனஸ் அறிவிக்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரசு பள்ளிகளில் உள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கும் பொங்கல் போனசை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
பொங்கல் போனஸ் வழங்க தமிழக அரசு அதற்காக ரூ. 221 கோடி நிதி ஒதுக்கியது. அரசு ஊழியர்கள், தொகுப்பூதியம், தினக்கூலிகள் மற்றும் பகுதிநேர ஊழியர்கள் என அனைவருக்கும் போனஸ் உண்டு.
ஆனால் 2012-ம் ஆண்டு முதல் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மட்டுமே போனஸ் மறுக்கப்படுகிறது. மற்ற பகுதிநேர ஊழியர்களை போல், பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பதே இவர்கள் கோரிக்கை ஆகும்.
ஜாக்டோ ஜியோ மாநாட்டில் தமிழக முதலமைச்சர் பகுதி நேர ஆசிரியர்களுக்கு 60 வயது வரை பணி நீட்டிப்பு மற்றும் பணிமாறுதல் வழங்கப்படும் என அறிவித்ததால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தியது.
அதுபோல் பொங்கல் போனஸ் விஷயத்திலும் தமிழக முதலமைச்சர் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்தால் மட்டுமே பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்துவார்கள்.
இதற்கான கோரிக்கையை நேரிலும், கடிதம், இ-மெயில் மூலமாகவும் டிசம்பர் 15-ந்தேதி முதல் வைத்து வருகிறோம். பொங்கல் பண்டிகை வர உள்ளது.
இனியும் தாமதிக்காமல் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் பொங்கல் கொண்டாட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் போனஸ் அறிவிக்க வேண்டும்.
மேலும், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக சேர்க்கப்பட்ட, பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் இந்த கோரிக்கை எழுந்து இருக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.