search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் சொத்து மதிப்பு 30 சதவீதம் வரை அதிகரிப்பு: ரியல் எஸ்டேட் அதிபர்கள் மகிழ்ச்சி
    X

    சென்னையில் சொத்து மதிப்பு 30 சதவீதம் வரை அதிகரிப்பு: ரியல் எஸ்டேட் அதிபர்கள் மகிழ்ச்சி

    • 2013-ம் ஆண்டு கீழ்ப்பாக்கத்தில் சதுரடி ரூ.11,600 என்ற அளவில் இருந்த விலை இப்போது 14 சதவீதம் உயர்ந்து ரூ.13 ஆயிரத்து 200 என நிர்ணயித்து வியாபாரம் செய்கின்றன.
    • கிண்டியில் சதுரடி ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.13 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துவிட்டது.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் வந்த பிறகு விமான நிலையம் முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் செல்லும் பயணம் மிக எளிதாகி விட்டது. இதே போல் கோயம்பேட்டில் இருந்து எழும்பூர் செல்வதற்கும் மெட்ரோ ரெயில் சேவை எளிதாக உள்ளதால் மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    அடுத்த கட்டமாக மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் மிக முக்கிய சாலைகளான கடற்கரை சாலை, போரூர் சாலை, வடபழனி, ஆற்காடு சாலை, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம் சாலை, மேடவாக்கம், பெரும்பாக்கம் சாலை, பூந்தமல்லி, சோழிங்கநல்லூர் பிரதான சாலை வழியாக அமைக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக மெட்ரோ ரெயில் பாதை செல்லும் பகுதிகளை சுற்றியுள்ள இடங்களின் சொத்து மதிப்பு திடீரென 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. மற்ற பகுதிகளை காட்டிலும் மெட்ரோ ஸ்டேஷன் அமைவிடங்களில் இதை விட அதிகமாக 50 சதவீதம் வரை சொத்து மதிப்பை அதிகரித்து சொல்கின்றனர்.

    2013-ம் ஆண்டு கீழ்ப்பாக்கத்தில் சதுரடி ரூ.11,600 என்ற அளவில் இருந்த விலை இப்போது 14 சதவீதம் உயர்ந்து ரூ.13 ஆயிரத்து 200 என நிர்ணயித்து வியாபாரம் செய்கின்றன.

    வடபழனியில் சதுரடி ரூ.7ஆயிரத்து 900 என்று இருந்தது. இப்போது 27 சதவீதம் உயர்ந்து ரூ.10 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு இடம் விற்பனையாகிறது.

    கோயம்பேட்டில் சதுரடி 7 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.8ஆயிரத்து 800-ஆகவும், சைதாப்பேட்டையில் ரூ.9 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.11 ஆயிரத்து 900-ஆகவும் அதிகரித்துவிட்டது.

    கிண்டியில் சதுரடி ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.13 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துவிட்டது.

    மவுண்ட் பூந்தமல்லி சாலையில் மெட்ரோ வழித்தடத்தில் நிலத்தின் விலை 2005-ம் ஆண்டில் இருந்து சராசரியாக 50 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது.

    அண்ணாசாலையில் ஆண்டுக்கு ஆண்டு 4.5 சதவீதம் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஓ.எம்.ஆர். ராஜீவ்காந்தி சாலையில் கடந்த சில ஆண்டுகளில் சராசரியாக 30 சதவீதம் அளவுக்கு நிலத்தின் மதிப்பு அதிகரித்து உள்ளது.

    இதுபற்றி ரியல் எஸ்டேட் டெவலப்பர் சங்கங்களின் கூட்ட மைப்பு தலைவர் சிவ குருநாதன் கூறியதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆரம்பம் முதல் நிலத்தின் மீது முதலீடு செய்வது என்பது அனேக மக்களின் விருப்பமாக உள்ளது.

    இந்த சூழலில் வளர்ந்து வரும் சென்னை புறநகரில் வெளிமாநில ரியல் எஸ்டேட் அதிபர்கள் அதிக முதலீடு செய்து வீடு கட்டி விற்பனை செய்வதால் அப்பகுதி வளர்ச்சி அடைவதுடன் நிலத்தின் மதிப்பும் அதிகரித்துவிட்டது. வடசென்னை, தென் சென்னையின் பல்வேறு இடங்கள் மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர், பூந்தமல்லி, போரூர் போன்ற முக்கிய இடங்களில் சொத்து மதிப்பு திடீரென 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்து விட்டது.

    ஒரு காலத்தில் வடசென்னை வளர்ச்சி பெறாத பகுதியாக இருந்த நிலையில் இப்போது திருவொற்றியூர், மாதவரம் பகுதிகளுக்கு மெட்ரோ ரெயில் சேவை வந்ததின் காரணமாக இடத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

    அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் வந்துவிட்டது. பல மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை பல இடங்களில் காண முடிகிறது.

    மெட்ரோ ரெயில் சேவை வந்த பிறகு ரியல் எஸ்டேட் துறை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவடைந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2021-ம் ஆண்டு நிலவரப்படி சென்னையின் சில பகுதிகள் மெட்ரோ சேவை காரணமாக அதிக லாபம் ஈட்டித் தரும் பகுதிகளாக அமைந்துள்ளதாக ரியல் எஸ்டேட் துறையில் உள்ள மூத்த இயக்குனர் ஸ்ரீனிவாஸ் அக்னிபட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

    அதே சமயத்தில் மெட்ரோ சேவையை தாண்டி உட்புறம் உள்ள பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு விலை ஏற்றம் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    ஆனாலும் சென்னை மற்றும் புறநகரில் வளர்ச்சி அதிகரித்து வருவதால் நாளுக்கு நாள் ரியல் எஸ்டேட் துறையும் வளர்ந்து அதிக லாபம் தரும் தொழிலாக மாறி வருகிறது என்று தெரிவித்தார்.

    Next Story
    ×