என் மலர்
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் ராகுல் ஒரே நாளில் 3 இடங்களில் பேச திட்டம்: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது பற்றி டெல்லி மேலிடத்தில் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
- ராகுல் பிரசாரம் 10-ந் தேதிக்கு பிறகுதான் இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வரவிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை கூறினார்.
முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது பற்றி டெல்லி மேலிடத்தில் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இதற்கிடையில் அந்த அந்த மாநிலங்களில் ராகுல் காந்தி எந்தெந்த தொகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்பது பற்றி பயண திட்டங்களை வகுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலும் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் தொடர்பாக செல்வ பெருந்தகை மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த தேர்தலில் ஒரே நாளில் 4 இடங்களில் பிரசாரம் செய்தார். இந்த முறையும் 3 அல்லது 4 இடங்களில் பிரசாரம் செய்யும் வகையில் பயண திட்டம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய ஏதாவது ஒரு இடம்.
கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி தொகுதிகள் சார்ந்த ஒரு இடம்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் தொகுதிகளை சார்ந்த ஒரு இடம்.
திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் தொகுதிகளில் ஒரு இடம், இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
ராகுல் பிரசாரம் 10-ந் தேதிக்கு பிறகுதான் இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.