search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதல் முறையாக ராஜீவ் நினைவிடம் செல்லும் ராகுல்
    X

    ராஜீவ் நினைவிடத்துக்கு வந்தபோது அழுதபடியே தரையில் அமர்ந்துவிட்ட பிரியங்காவை ராகுல் ஆறுதல் படுத்தினார். (பழைய படம்)

    முதல் முறையாக ராஜீவ் நினைவிடம் செல்லும் ராகுல்

    • ராஜீவ் படுகொலை செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2003ம் ஆண்டு நினைவிடம் கட்டி முடித்து திறக்கப்பட்டது.
    • ராஜீவ் மறைவை தொடர்ந்து ராகுல் அரசியல் களத்துக்கு வந்தார்.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் பாரத ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை நடைபெறுகிறது.

    இந்த பாத யாத்திரையை ராகுல் நாளை (7-ந் தேதி) கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறார். 150 நாட்கள் அவர் பாத யாத்திரையாக செல்கிறார்.

    இதற்காக ராகுல்காந்தி இன்று இரவு 8.15 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். விமான நிலையத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் வரவேற்கிறார்கள். ராகுல் காந்தியுடன் ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்-மந்திரி பாகல் மற்றும் மூத்த தலைவர்கள் வருகிறார்கள்.

    சென்னை விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் சென்னை அல்லது ஸ்ரீபெரும்புதூரில் இரவு தங்குகிறார். சென்னையில் விமான நிலையம் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டல், ஸ்ரீபெரும்புதூரில் சத்யம் ரிசார்ட் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    நாளை காலை 6.45 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்துக்கு செல்கிறார். அங்கு தனது தந்தையின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி வணங்குகிறார்.

    அதை தொடர்ந்து 7 மணி முதல் 8 மணி வரை நினைவிடத்தில் தியானம் செய்கிறார். அதன்பிறகு மரக்கன்று நடுகிறார். பின்னர் அங்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தொழிலாளர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார்.

    அதை தொடர்ந்து நினைவிடத்தின் வெளியே பாதயாத்திரையின் அடையாளமாக கட்சி கொடியேற்றுகிறார்.

    அதன்பிறகு சென்னை விமான நிலையம் திரும்புகிறார். காலை 11.40 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி செல்கிறார்.

    ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப்படை தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

    இரவு 10 மணிக்கு நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    31 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கொடூர சம்பவம் நடந்தது. அப்போது ராகுலும், பிரியங்காவும் சிறுவர்கள். பிரசாரத்துக்கு சிரித்த முகத்துடன் புறப்பட்டு சென்ற கணவரின் உடல் சின்னாபின்னமாக்கப்பட்டு கொண்டு வரப்பட்டதை பார்த்து சோனியா குடும்பம் கதறியது. தந்தையை பறிகொடுத்த ராகுலும், பிரியங்காவும் கதறினார்கள்.

    ராஜீவ் படுகொலை செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2003ம் ஆண்டு நினைவிடம் கட்டி முடித்து திறக்கப்பட்டது.

    காங்கிரஸ் தலைவர்கள் பலர் இந்த நினைவிடத்துக்கு வந்துள்ளார்கள். ஆனால் ராகுல் வந்ததில்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை ராகுலும், பிரியங்காவும் அஞ்சலி செலுத்த வந்தனர்.

    நினைவிடத்தின் அருகே காரைவிட்டு இறங்கியதும் பிரியங்கா துக்கம் தாளாமல் தரையில் அமர்ந்து கதறி அழுதுவிட்டார். அதை பார்த்து அருகில் நின்றவர்களும் அழுதனர்.

    தங்கை பிரியங்காவை கட்டி அணைத்து ராகுல் ஆறுதல்படுத்த முயன்றும் முடியாமல் போனது. அதனால் நினைவிடத்துக்கு செல்லாமலே தங்கையை காருக்கு அழைத்து சென்று விட்டார்.

    அதன் பிறகு இப்போது தான் ராகுல் முதல் முறையாக வருகிறார். இப்போதும் தந்தையின் நினைவில் உணர்ச்சி பிழம்பாகத்தான் இருப்பார் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினார்கள்.

    இந்திராவின் மறைவை தொடர்ந்து ராஜீவ் அரசியலுக்கு வந்தார். ராஜீவ் மறைவை தொடர்ந்து ராகுல் அரசியல் களத்துக்கு வந்தார். ராஜீவ் காலம் வரை கம்பீரமாக இருந்த காங்கிரஸ் இப்போது கரை சேர முடியாமல் தத்தளிக்கிறது.

    இந்த கடினமான காலகட்டத்தில் காங்கிரசை கரை சேர்க்க கால்கடுக்க நடக்கப்போகும் ராகுல் தந்தையின் ஆசிக்காக நாளை மனம் உருக பிரார்த்தனை செய்கிறார்.

    Next Story
    ×