search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரெயில்வே கேட் மூடல்: 15 நிமிட தாமதத்தால் பறிபோன உயிர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ரெயில்வே கேட் மூடல்: 15 நிமிட தாமதத்தால் பறிபோன உயிர்

    • சிங்கபெருமாள் கோவில் ரெயில்வே கேட்டை கடந்து தான் அப்பகுதி மக்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
    • ரெயில்வே கேட்டில் அணிவகுத்த வாகனங்களுக்கு மத்தியில் நெரிசலுக்கிடையே 4 பேர் பாலாவின் கை, கால்களை பிடித்துக்கொண்டு தூக்கி சென்றனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்துள்ள சிங்கபெருமாள் கோவில் ரெயில்வே கேட் நீண்ட நேரமாக மூடப்பட்டிருந்ததால் நோயாளி ஒருவர் துடிதுடித்து பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், ரெயில்வே நிர்வாகத்தின் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    மறைமலைநகர் அருகே உள்ள திருக்கச்சூர் மனுமேடு பகுதியை சேர்ந்தவர் பாலா. பிளம்பர் மற்றும் எலக்ட்ரீஷியனான இவருக்கு நேற்று முன்தினம் மாலையில் திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பாலாவை ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

    சிங்கபெருமாள் கோவில் ரெயில்வே கேட்டை கடந்து தான் அப்பகுதி மக்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பாலாவையும் ஆட்டோவில் ஏற்றி அந்த வழியாக அழைத்துச் சென்றனர். அப்போது ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. இதனால் நீண்ட நேரம் ரெயில்வே கேட்டில் ஆட்டோவிலேயே பாலா துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பாலாவின் உறவினர்கள் தவித்தனர். பின்னர் பாலாவை தூக்கிக்கொண்டு ரெயில்வே தண்டவாளத்தை கடந்து விடலாம் என்று அவர்கள் முடிவு செய்தனர். இதன்படி ரெயில்வே கேட்டில் அணிவகுத்த வாகனங்களுக்கு மத்தியில் நெரிசலுக்கிடையே 4 பேர் பாலாவின் கை, கால்களை பிடித்துக்கொண்டு தூக்கிச் சென்றனர்.

    எந்த நேரத்திலும் ரெயில் தண்டவாளத்தை கடக்கலாம் என்ற நிலையில் ஆபத்தான முறையில் நோயாளியான பாலாவை தூக்கிக்கொண்டு அவரது உறவினர்கள் தண்டவாளத்தை கடந்து சென்றதை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் பின்னர் பாலாவை அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ஆஸ்பத்திரிக்கு சென்றதால் பாலாவின் உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்று அவரது உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது எங்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்று தெரிவித்தனர். அதே நேரத்தில் ரெயில்வே கேட்டை மூடிய பின்னர் ரெயில் சென்ற பிறகுதான் திறக்க முடியும் என்றும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.

    சிங்கபெருமாள் கோவில் ரெயில்வே கேட்டை கடந்து தினமும் பல ரெயில்கள் செல்வதால் அந்த கேட் அடிக்கடி மூடப்படுவதாகவும், இதனால் சில நேரங்களில் 2 மணி நேரம் வரையில் காத்திருக்க வேண்டியுள்ளது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அப்பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

    Next Story
    ×