என் மலர்
தமிழ்நாடு
ரெட்டேரி ஏரியில் தண்ணீர் இருப்பை அதிகரிக்க ஆழப்படுத்தும் பணி
- ரெட்டேரி தண்ணீரை சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
- ஏரியை ஆழப்படுத்திய பின்னர் மொத்த கொள்ளளவு 43.15 மில்லியன் கனஅடியாக அதிகரிக்கும்.
கொளத்தூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
இந்த ஏரிகளில் இருந்து சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதி முழுவதும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் கோடை காலங்களில் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கொளத்தூர் அருகே உள்ள ரெட்டேரி தண்ணீரை சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ரெட்டேரி ஏரி சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இந்த ஏரி சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ரெட்டேரி ஏரியை மேம்படுத்தி கூடுதல் தண்ணீரை சேமித்துவைத்து அதனை குடிநீருக்கு பயன்படுத்த பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ.43.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஏரியை ஆழப்படுத்திய பின்னர் மொத்த கொள்ளளவு 43.15 மில்லியன் கனஅடியாக அதிகரிக்கும். இது முந்தைய கொள்ளவை விட 13 மில்லியன் கனஅடி அதிகம் ஆகும். ரெட்டேரியை மேம்படுத்தும் வகையில் அதனை சுற்றி கரைகளும் அமைக்கப்பட உள்ளன. நீர்நிலையில் இருந்து அகற்றப்படும் வண்டல் மண்ணை பயன்படுத்தி ரெட்டேரி சந்திப்பில் இருந்து 3 கி.மீ தூரம் வரை கரைகள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும். மேலும் பறவைகள் தங்கும் வகையில் ஏரியில் 3 செயற்கைத் தீவுகளும் உருவாக்கப்பட உள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ரெட்டேரி ஏரி நீரை குடிநீருக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே சென்னை மெட்ரோ வாட்டர் மூலம் தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரித்து அனுப்பும் வகையில் உள்கட்டமைப்புகள் உள்ளன.
புழல் ஏரியின் உபரிநீர்ப்பாதையில் தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் பணிகள் முடிந்து உள்ளன. ஜி.என்.டி. சாலையின் இருபுறமும் ஏரிக்கரை பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. கூவம் ஆற்றின் ஓரத்தில் கட்டப்படும் சுற்றுச்சுவர் அங்கு குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் அமையும். மேலும் ஏரிக்கரையை குறைந்தது 3 அடிக்கு ஆழமாக்கி தூர்வாரப்படும். இதன் மூலம 6 முதல் 7 லட்சம் கனமீட்டர் வண்டல் மண் அகற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதவரத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் திட்டமிடப்பட்டு உள்ளது. சுமார் 20 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் விரைவில் அகற்றப்படும் என்றார்.
இதுகுறித்து ரெட்டேரி பகுதி மக்கள் கூறும்போது, ரெட்டேரி ஏரியில் தண்ணீர் என்றுமே வற்றியது கிடையாது. வருடம் முழுவதும் இங்கு தண்ணீர் இருக்கும். இந்த மிகப்பெரிய ஏரியை நீர்வளத்துறை அதிகாரிகள், குடிநீர் ஆதாரமாக மட்டும் பயன்படுத்தாமல் ரெட்டேரியை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைத்து படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்து சுற்றுலா மையம் அமைக்கலாம். மேலும் ஏரியை ஒட்டி உள்ள லட்சுமிபுரம் பஸ் நிறுத்தம் அருகே ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. மாதவரம் மண்டல அதிகாரிகள் இதனை அகற்றி வந்தாலும் அடுத்த 2 நாட்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது என்றனர்.