search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த தர்பூசணிகள்
    X

    வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த தர்பூசணிகள்

    • பகல் நேரங்களில் வெளியே செல்பவர்கள் குளிர்பான கடைகளில் பழஜூஸ், மோர் உள்ளிட்டவற்றை பருகி தாகம் தீர்த்து வருகிறார்கள்.
    • தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 200டன் அளவுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது.

    போரூர்:

    தமிழகத்தில் தற்போது பனி சீசன் முடிந்து கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கி விட்டது. இதனால் சாலை ஓரங்களில் நீர் மோர், இளநீர், கரும்புச்சாறு, பழச்சாறு, நுங்கு, தர்பூசணி பழங்கள் விற்பனை அதிக அளவில் முளைத்து உள்ளன.

    பகல்நே ரங்களில் வெளியே செல்பவர்கள் குளிர்பான கடைகளில் பழஜூஸ், மோர் உள்ளிட்டவற்றை பருகி தாகம் தீர்த்து வருகிறார்கள். தொடர்ந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் சாலையோர குளிர்பான கடைகளில் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

    மேலும் சாலையோரங்களில் ஆங்காங்கே தற்போது வெயிலுக்கு இதமான தர்பூசணி விற்பனையும் அதிகரித்து உள்ளன. குவித்து வைத்து விற்கப்படும் தர்பூசணியை முழுபழங்களாகவும் வீடுகளுக்கு அதிக அளவில் வாங்கி செல்வதை காணமுடிகிறது.

    இந்த நிலையில் கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த 10 நாட்களாகவே செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு குவியத் தொடங்கி உள்ளன.

    தற்போது தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 200டன் அளவுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. மொத்த விற்பனையில் தர்பூசணி ஒரு கிலோ ரூ.18-க்கு விற்கப்படுகிறது.

    வெளி மார்கெட்டில் உள்ள கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் தர்பூசணி பழங்களின் வரத்து மேலும் அதிகரித்து விற்பனை சூடு பிடிக்கும் என்று பழ வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×