என் மலர்
தமிழ்நாடு
விஜயை சந்தித்தேன்.. கூட்டணி குறித்து பேச்சு.. சீமான் சொல்வது என்ன?
- நாம் தமிழர் கட்சியின் சீமான் பல முறை பதில் அளித்துள்ளார்.
- தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில் நடைபெற இருக்கிறது.
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் வந்துள்ளார். இடையில், விஜயுடன் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் பல முறை பதில் அளித்துள்ளார்.
அந்த வகையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றுக்கு பேட்டியளித்த சீமான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அப்போது, "விஜயை சமீபத்தில் சந்தித்தேன். அதன் பிறகு மற்றொரு சந்திப்பும் நடைபெற இருந்தது. எனினும், திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் ரிலீஸ் வேலைகள் இருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லை. இரண்டு மாதங்கள் முன் நடத்திய சந்திப்பில் அரசியல் பேசினோம்."
"சேர்ந்து போட்டியிடுவது பற்றிதான் பேசினோம். இறுதியில் அவர் என்ன முடிவு எடுப்பார் என்று தெரியவில்லை. அவருக்கு ஆலோசனை வழங்குபவர்கள் தேசிய கட்சி யாரேனும் கூட்டணியில் இருந்தால் நல்லது என்று நினைக்கலாம். அவரும் என்னிடம், காங்கிரஸ் எப்படி என்று கேட்டார். காங்கிரஸை வைத்துக் கொண்டு நாம் என்ன பேசுவது என்று கூறுமாறு கேட்டேன்," என்றார்.
விஜயுடன் சந்திப்பு பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதிலுக்கு சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஒருசிலர் த.வெ.க. கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது என்றும், சிலர் இறுதி முடிவை தளபதி தான் எடுப்பார் என்றும், மேலும் சிலர் இந்த தகவலில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்றும் கமென்ட் செய்து வருகின்றனர்.
இதுதவிர 2026 சட்டமன்ற தேர்தலில், த.வெ.க., நா.த.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என்றும் சிலர் இந்த கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்றும் கமென்ட் செய்துள்ளனர். மேலும் சிலர் கருத்தியல் ரீதியாக கூட்டணி அமையாது என்றும் கமென்ட் செய்துள்ளனர். சிலர் விஜய் கூட்டணி வைக்கக்கூடாது என்றும் கமென்ட் செய்துள்ளனர்.