search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு: தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி- ராமதாஸ்
    X

    முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு: தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி- ராமதாஸ்

    • பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியாது.
    • தமிழக அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டை அணுகி, கண்காணிப்புக் குழுவின் ஆணைக்கு தடை பெற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது மூடி விட வேண்டும் என்று கேரளம் துடித்துக் கொண்டு இருக்கும் நிலையில், அம்மா நில அரசின் கோரிக்கையை ஏற்று அணையின் பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழு ஆணையிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தி, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு இன்னும் செயல்படுத்தப்படாத நிலையில், பாதுகாப்பு ஆய்வு நடத்துவது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்த வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டிலும், அதன்பின் 2014-ம் ஆண்டிலும் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணையை வலுப்படுத்தும் பணிகள் நிறைவடைந்த பிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் ஆணையிட்டிருந்தது. சுப்ரீம்கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு செயல்படுத்தப்படுவதை கண்காணிப்பது தான் கண்காணிப்புக் குழுவின் பணியாகும். ஆனால், அமைக்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது.

    முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த ஆய்வை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று கண்காணிப்புக் குழு ஆணையிட்டிருந்தாலும், அது முடிவடைய இரு ஆண்டுகள் ஆகலாம். அதுவரை பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியாது.

    எனவே, தமிழக அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டை அணுகி, கண்காணிப்புக் குழுவின் ஆணைக்கு தடை பெற வேண்டும். மரங்களை வெட்டி, பேபி அணையை வலுப்படுத்திய பிறகு முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ளலாம் என்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டிடமிருந்து பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×