என் மலர்
தமிழ்நாடு

தொடர்ந்து கோடை மழை: மீஞ்சூர்-பொன்னேரி பகுதியில் 300 ஏக்கர் பயிர்கள் பாதிப்பு
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது பலத்த மழை கொட்டுகிறது.
- பொன்னேரி-மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை செய்த பின்னர் பச்சை பயிர் மற்றும் தர்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது.
பொன்னேரி:
தென்இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழ்அடுக்குகளில் கிழக்குதிசை காற்றும், மேற்குதிசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது பலத்த மழை கொட்டுகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் கடந்ந சில நாட்களாக விட்டு விட்டு கோடை மழை கொட்டி வருகிறது. பொன்னேரி-மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை செய்த பின்னர் பச்சை பயிர் மற்றும் தர்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் பச்சை பயிர் சாகுபடி செய்திருந்த சுமார் 300 ஏக்கர் மழை நீர் தேங்கி வெளியேற முடியாமல் காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து அறிந்ததும், மீஞ்சூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் டில்லிகுமார், வேளாண்மை துணை அலுவலர் விநாயகம் மற்றும் அதிகாரிகள் சின்னக்காவனம், மெதூர், விடதண்டலம், பெரும்பேடு, ஆகிய கிராமங்களில் விளைநிலங்களில் தேங்கி உள்ள தண்ணீரை நேரில் சென்றுஆய்வு செய்தனர். மேலும் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.