search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பூர் அருகே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டது
    X

    பெரம்பூர் அருகே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டது

    • சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் மிகவும் குறைந்த வேகத்திலேயே பேசின் பிரிட்ஜ் நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • பெரம்பூர் அருகே ரெயில் சென்றபோது திடீரென தண்டவாளத்தை விட்டு 2 பெட்டிகள் தடம் புரண்டன.

    சென்னை:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு நேற்று இரவு 11 மணிக்கு ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதன் பின்னர் அதில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கினார்கள்.

    இதன் பிறகு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் யாரும் இன்றி பேசின்பிரிட்ஜ் பணிமனைக்கு புறப்பட்டு சென்றது. எப்போதுமே பணிமனைக்கு செல்லும் ரெயில்கள் குறைவான வேகத்திலேயே இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் மிகவும் குறைந்த வேகத்திலேயே பேசின் பிரிட்ஜ் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    பெரம்பூர் அருகே ரெயில் சென்றபோது திடீரென தண்டவாளத்தை விட்டு 2 பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து ரெயில் நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் இருந்து இறங்கிய 2 ரெயில் பெட்டிகளையும் சரி செய்து மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான பணியை ஊழியர்கள் உடனடியாக தொடங்கினார்கள்.

    2 மணி நேர போராட்டத்துக்கு பிறகே ரெயில் பெட்டி சீரமைக்கப்பட்டு ரெயிலுடன் இணைக்கப்பட்டது. பின்னர் ரெயில் பேசின்பிரிட்ஜ் பணி மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. குறைவான வேகத்திலேயே இயக்கப்பட்ட ரெயில் தடம் புரண்டது எப்படி என்பது தெரியவில்லை. இது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்துக்கு பின்னர் அனைத்து வழித்தடங்களிலும் உஷாராக இருக்க ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கும் நிலையில் சென்னையில் ரெயில் தடம் புரண்டிருக்கும் சம்பவத்தை போலீசார் எளிதாக எடுத்துக்கொள்ளாமல் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    ரெயில் தடம் புரண்ட போது பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×