search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க 40 படகுகள்: தயார் நிலையில் 900 தீயணைப்பு வீரர்கள்
    X

    வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க 40 படகுகள்: தயார் நிலையில் 900 தீயணைப்பு வீரர்கள்

    • சென்னை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பதற்கு வசதியாக 40 படகுகள் தயாராக உள்ளன.
    • காவல் துறை மற்றும் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைகளுடன் தீயணைப்பு வீரர்கள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரமாகி இருப்பதை தொடர்ந்து சென்னையில் தீயணைப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

    தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் நேரங்களில் மக்களை அதில் இருந்து காப்பாற்றி வெளியில் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். சென்னையில் தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னையில் உள்ள 42 தீயணைப்பு நிலையங்களிலும் நிலைய அதிகாரிகள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    சென்னை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பதற்கு வசதியாக 40 படகுகள் தயாராக உள்ளன. அதே போன்று 40 மின்மோட்டார்களையும் தீயணைப்பு அதிகாரிகள் தயார்படுத்தி வைத்து உள்ளனர்.

    தீயணைப்பு துறையில் பணியில் உள்ள அதிகாரிகள் முதல் களப்பணியாற்றும் வீரர்கள் வரை அத்தனை பேரும் மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்கு வசதியாக 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் என 900 பேர் 24 மணி நேரமும் பணியில் உள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மழை பாதிப்பின் போது சாலைகளில் சாய்ந்து விழும் மரங்கள் மற்றும் முறிந்து விழும் மரங்களை அகற்றுவதற்கும் தீயணைப்பு வீரர்கள் தயாராக உள்ளனர். இதற்காக 'பவர் ஷா' எனறு அழைக்கப்படும் மரம் அறுக்கும் எந்திரங்களையும் தீயணைப்பு அதிகாரிகள் தயார்படுத்தி வைத்து உள்ளனர். இது தவிர 3 பெரிய மோட்டார் பம்புகளும் தயாராக உள்ளன.

    சென்னை மாநகராட்சி, காவல்துறை ஆகியோர்களுடன் தீயணைப்பு துறையினர் இணைந்து செயல்படும் வகையில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன.

    இதற்காக காவல் துறை மற்றும் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைகளுடன் தீயணைப்பு வீரர்கள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இதன் மூலம் பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து செல்ல வழி ஏற்படுவதுடன் மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெறும் என்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×