என் மலர்
தமிழ்நாடு

தமிழகத்தில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரிப்பு

- 4,562 சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்ததாக 4,465 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- 3,435 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 34 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் சமீபத்தில் சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. தமிழகத்தில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் 39.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பான உண்மையான காரணத்தை அறிய மாநில குற்ற ஆவண காப்பகம், அனைத்து மண்டல ஐ.ஜி.க்கள், டி.ஜி.பி.க்கள் ஆகியோரிடம் அறிக்கை கேட்டுள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் படி சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2019-ம் ஆண்டில் 4,139 வழக்குகளும், 2020-ம் ஆண்டில் 4,338 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
அதேநேரத்தில் கடந்த ஆண்டு இந்த வழக்குகளின் எண்ணிக்கை 6,064 ஆக அதிகரித்துள்ளன. போக்சோ சட்டத்தின் கீழ் 56 கொலைகள், 69 குழந்தைகள் இறப்பு ஆகிய வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 3 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
16 சிறுவர்களை கொலை செய்ய முயன்ற வழக்குகளும், 8 சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டிய வழக்குகளும் பதிவாகி உள்ளன. சிறுவர்களை தாக்கி சிறிய காயம் ஏற்படுத்தியதாக 80 வழக்குகளும், கடுமையான காயம் ஏற்படுத்தியதாக 8 வழக்குகளும், 319 கடத்தல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 47 சிறுமிகள் கடத்தி விற்கப்பட்டுள்ளதாகவும் வழக்குகள் பதிவாகி உள்ளன.
4,562 சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்ததாக 4,465 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 3,435 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 34 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 128 குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 15 வழக்குகள் சிறுவர் இல்லங்களின் பராமரிப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் 15 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், கடத்தியதாகவும் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் சென்னையில் 435 வழக்குகளும், கோவையில் 81 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
சிறுமியர்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளிக்க முன்வந்துள்ளனர். அதன் காரணமாக வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.