என் மலர்
தமிழ்நாடு
வடபழனியில் 40 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டிடம் நவீன முறையில் 5 அடி மேலே உயர்த்தப்படுகிறது
- கட்டிடத்தில் மேன்சன், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
- 3 மாடி கட்டிடத்தை நவீன தொழில்நுட்ப முறையில் தரை தளத்தில் இருந்து 5 அடி உயரத்துக்கு மேலே தூக்க முடிவு செய்யப்பட்டது.
சென்னை:
சென்னை வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் 40 வருட பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது.
இந்த கட்டிடம் 3 மாடிகளை கொண்டது. இதன் மொத்த தரைப் பரப்பளவு 2,400 சதுர அடி. இதில் 7,200 சதுர அடி அளவுக்கு 3 மாடிகளாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் மேன்சன், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. 30 பேருக்கு இவை வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
இந்த கட்டிடம் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட போது சாலையை விட சற்று உயரமானதாக இருந்தது. அதன் பிறகு பலமுறை சாலை போடப்பட்டது. சாலை நன்கு உயர்த்தப்பட்ட நிலயில் இந்த கட்டிடம் இருக்கும் இடம் தற்போது பள்ளமாக உள்ளது.
எனவே பருவ மழைக் காலங்களில் மழை நீர் இந்த கட்டிடத்தில் உள்ள கடைகளுக்குள் புகுந்து விடுகிறது. ஒரு மழை பெய்தாலே இந்த கட்டிடம் வெள்ளத்தில் மிதக்க தொடங்கியது. இதனால் இங்கு வாடகைக்கு இருப்பவர்களும், கடைக்காரர்களும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்த பழமையான கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டுமானால் ரூ.2 கோடிக்கு மேல் செலவாகும். மேலும் இதற்கான கட்டிட அனுமதி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கும் அலைய வேண்டிய நிலை வரும். மேலும் கடைக்காரர்கள், வணிக நிறுவனங்கள், மேன்சனில் தங்கி இருப்பவர்களும் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை வரும். இதனால் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும்.
இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த 3 மாடி கட்டிடத்தை நவீன தொழில்நுட்ப முறையில் தரை தளத்தில் இருந்து 5 அடி உயரத்துக்கு மேலே தூக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக இந்த கட்டிடத்தின் உரிமையாளர், நோவா இன்ப்ராஸ் டெரக்சர் என்ற நிறுவனத்தை அணுகினார். அதன் பிறகு இரு தரப்பினரும் கலந்து பேசி கட்டிடத்தை உயர்த்த முடிவு செய்தனர். இதற்கான பணிகள் ஒன்றரை மாதத்துக்கு முன்பு தொடங்கியது.
தினமும் 20 ஊழியர்கள் கட்டிடத்தை உயர்த்தும் பணியில் ஈடுபட்டனர். ஜாக்கி மூலம் கட்டிடத்தை உயர்த்தினார்கள். கடந்த ஒன்றரை மாதத்தில் 2 அடி உயரத்துக்கு கட்டிடம் மேலே தூக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த கட்டிடம் இன்னும் 3 அடி தூக்கப்பட்டு மொத்தம் 5 அடிக்கு உயர்த்தப்படுகிறது. கட்டிடம் உயர்த்தப்பட்டவுடன் அதே பொலிவுடன் காட்சியளிக்கும்.
தற்போது இந்த கட்டிடம் ஜாக்கியின் உதவியால் அந்தரத்தில் நிற்கிறது. இந்த கட்டிடத்தை உயர்த்துவதற்கான செலவு ரூ.40 லட்சம் ஆகும்.
இந்த கட்டிடத்தை உயர்த்தும் பணி தொடர்பாக நோவா இன்ப்ராஸ் டெரக்சர் நிறுவன உரிமையாளர் ஸ்டாலின் கூறியதாவது:-
இந்த கட்டிடம் 40 வருடம் பழமையானது. இந்த கட்டிடத்தின் சுவரும், பக்கத்து கட்டிடத்தின் சுவரும் பொது சுவராகும். எனவே பக்கத்து கட்டிட உரிமையாளரிடம் அனுமதி பெற்று இந்த கட்டிடத்தை பக்கத்து கட்டத்தில் இருந்து பிரித்து நகர்த்தினோம்.
அதன் பிறகு கட்டிடத்தை சுற்றியுள்ள சுவர்களை துண்டித்து ஜாக்கி உதவியுடன் உயர்த்தி வருகிறோம். மிகுந்த பாதுகாப்புடன், கட்டிடத்துக்கு எந்த சேதமும் வராமல் நவீன முறையில் உயர்த்தி வருகிறோம்.
இப்படி சாலையில் இருந்து பள்ளத்தில் இருக்கும் கட்டிடங்களை உயர்த்துவது சென்னையில் பல இடங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டுவதை விட, நவீன முறையில் உயர்த்துவதால் ஏற்கனவே இருந்தது போலவே இந்த கட்டிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டிடம் உயர்த்தப்படுவதால் எந்த பாதிப்பும் இருக்காது. தொழிலாளர்களை பயன்படுத்தி இந்த பணிகளை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.