என் மலர்
தமிழ்நாடு
சென்னை பூங்கா நகரில் நகைபட்டறை அதிபர்களை கட்டிபோட்டு 50 பவுன் நகைகள் கொள்ளை
- கொள்ளையர்கள் தாக்கியதில் நகை பட்டறை அதிபர்களான அலாவுதீன், சக்ஜத் இருவரும் பலத்த காயம் அடைந்து இருந்தனர்.
- 2 பேரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னை பூங்கா நகர் பகுதியில் நகை பட்டறை வைத்து நடத்தி வருபவர்கள் அலாவுதீன், சக்ஜத். இவர்கள் இருவரும் நேற்று இரவு நகை பட்டறையில் அமர்ந்து பணிகளை கவனித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது மர்மநபர்கள் 2 பேர் அங்கு வந்தனர். இருவரும் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி நகை பட்டறை அதிபர்களான அலாவுதீன், சக்ஜத் இருவரையும் சரமாரியாக தாக்கி கட்டிப்போட்டனர். பின்னர் நகை பட்டறையில் இருந்த 50 பவுன் நகைகளை கொள்ளை அடித்தனர். இந்த நகைகளை மூட்டை கட்டி எடுத்துக் கொண்ட கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து நைசாக தப்பினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் யானைகவுனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்கள் தாக்கியதில் நகை பட்டறை அதிபர்களான அலாவுதீன், சக்ஜத் இருவரும் பலத்த காயம் அடைந்து இருந்தனர். இதை அடுத்து 2 பேரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தப்பி ஓடிய கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது கொள்ளையர்களில் ஒருவன் பிடிபட்டான். அவனது பெயர் ககத்ராய் என்பது தெரியவந்தது. அவனிடம் போலீசார் தப்பி ஓடிய கொள்ளையனான கூட்டாளி பற்றி விசாரணை நடத்தினர். இதில் அந்த கொள்ளையனின் பெயர் அஜய் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொள்ளையன் அஜய்யை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். பரபரப்பான பூங்கா நகர் பகுதியில் கொள்ளையர்கள் மிகவும் துணிச்சலாக நகை பட்டறை அதிபர்களை தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் தப்பி ஓடி தலைமறைவான கொள்ளையன் அஜய்யிடம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த நகைகளை மீட்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நகை பட்டறையில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் மற்ற பட்டறை அதிபர்கள் மற்றும் நகை கடை உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.