என் மலர்
தமிழ்நாடு
சென்னையில், நாளை காலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.
- அ.தி.மு.க.வும் தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
சென்னை:
சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படுகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்று உள்ள எடப்பாடி பழனிசாமியின் பின்னால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அணிவகுத்து உள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. அ.தி.மு.க.வும் தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நாளை நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் மத்தியில் விரிவாக விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தலையொட்டி ஆகஸ்ட் மாதம் மதுரையில் அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளிடம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார்.
இதையடுத்து மதுரை மாநாடு தொடர்பாகவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
ஆகஸ்ட் மாதம் நடைபெறும் மாநாட்டை பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்ட பிரசார மாநாடாக நடத்தவே அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர். அந்த மாநாட்டில் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் நாளைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்னர் அதில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பான அறிவிப்பை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வெளியிட உள்ளனர்.
இதன்மூலம் நாளை நடைபெறும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.